இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் 18 மாதங்கள் இடைநீக்கம்: பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பங்கேற்க முடியாது

By KU BUREAU

புதுடெல்லி: ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய காரணத்துக்காக இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் 18 மாதங்கள் இடை நீக்கம்செய்யப்பட்டுள்ளதை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. இதனால் அவர், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய பாரா பாட்மிண்டன் வீரரான பிரமோத் பகத், கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். வரும் 28-ம் தேதி பாரிஸில் தொடங்க உள்ளபாராலிம்பிக்ஸில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக பிரமோத் பகத்தை 18மாதங்கள் இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடகள வீரரும் தான் இருக்கும் இடம் குறித்து ஊக்க மருந்து தடுப்பு பிரிவுக்குதகவல் தெரிவிக்க வேண்டும். 12 மாதங்களுக்குள் 3 முறை தகவல் தெரிவிக்க தவறினால் அந்தவீரருக்கு தடை விதிக்கப்படும். இந்த வகையில்தான் பிரமோத் பகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டோக்கியோ பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் பிரமோத் பகத் 18 மாதங்கள் இடை நீக்கம் செய்யப்படுகிறார். இதனால் அவர், பாரிஸ் பாராலிம்பிக்கை தவறவிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு பிரமோத் பகத், உலக பாட்மிண்டன்கூட்டமைப்பின் ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையின்படி தான் இருக்கும் இடம் குறித்த தகவல்களை 12 மாதங்களுக்குள் 3 முறை தெரிவிக்காமல் இருந்ததை கண்டறிந்தது. இதைத் தொடர்ந்தே இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிரமோத் பகத் கடந்த மாதம், விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தின் மேல்முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த ஜூலை 29-ம் தேதி பிரமோத் பகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் நடுவர் மன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு விதித்தஇடைநீக்கத்தையும் உறுதி செய்துள்ளது. பிரமோத் பகத்தின்தகுதி நீக்க காலம் இப்போது நடைமுறையில் உள்ளது. அவரது இடைநீக்கம் 2025-ம் ஆண்டுசெப்டம்பர் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இடை நீக்கம் தொடர்பாக பிரமோத் பகத் கூறியதாவது: என்னை பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான முடிவு. சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமையை நான் மதிக்கிறேன். அவர்கள் அனைத்து வீரர்களுக்கும் ஒரு வரையறையை வகுக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒருவரை தடை செய்வது சரியல்ல. தடை செய்யப்பட்டது போன்ற பொருளை நான் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டு இது இல்லை.

நான் இருக்கும் இடம் குறித்த தகவலை தெரிவிக்காததுதான் பிரச்சினை. நான் வேறுஇடத்தில் இருந்ததால் இரு முறை சோதனையைதவறவிட்டேன். 3-வது முறை இதுபோன்று நிகழ்ந்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் தாக்கல் செய்தேன். ஆனால் எனது முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது எனக்கு ஒரு பெரிய இழப்பு. நான் பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன், ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இது ஒரு பெரிய விஷயம்.

நான் பதக்கம் வெல்லக் கூடியவன். இதனால் இடைநீக்கம் என்பது எனது இதயத்தை உடைக்கிறது. அதிகாரிகளின் முடிவை நாங்கள் மதிக்கிறோம், அதைக் கடைப்பிடிப்போம், ஆனால்எப்போதும் நேர்மையுடன் போட்டியிடும் ஒரு விளையாட்டு வீரராக இது எனக்கு சவாலான மற்றும் உணர்ச்சிகரமான நேரமாகும். இவ்வாறு பிரமோத் பகத் கூறினார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் எஸ்எல் 3 பிரிவில் போட்டியிட்ட பிரமோத் பகத் இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 36 வயதான பிரமோத் பகத், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 5-வது முறையாக வென்றிருந்தார். இதன் மூலம் சீனாவின் புகழ்பெற்ற வீரரான லின் டானின் சாதனையை சமன் செய்திருந்தார். உலகத் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பிரமோத் பகத், தனது 5-வது வயதில் போலியோ பாதிப்பால் இடது காலில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE