டி20 தொடரை வென்றது இந்தியா - 2வது போட்டியில் ஜெய்ஸ்வால், துபே அபாரம்

By காமதேனு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 2வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குல்புதீன் 57 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் எடுத்திருந்தது.

ஜெய்ஸ்வால், துபே அரை சதம் அடித்து அசத்தல்

இந்தியா தரப்பில் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் அக்சார் பட்டேல், ரவி பிஷ்வாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 150 ஆவது டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா, இந்த தொடரில் முதல் போட்டியை போலவே 2வது போட்டியிலும் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு திரும்பிய விராட் கோலி, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரன்களை சேகரித்தார். கோலி 29 ரன்களில் வெளியேறிய நிலையில், ஷிவம் துபே களம் இறங்கினார். இருவரும் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிக்ஸர்களை பறக்க விட்டனர்.

தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது

ஜெய்ஸ்வால் 68 ரன்களிலும், துபே 63 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து 15.5 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் கரீம் ஜனத், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் சிறந்த வீரராக அக்சார் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். 3வது மற்றும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS