ஆஸ்திரேலியாவை பந்தாடிய தென்னாப்பிரிக்கா... 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

By காமதேனு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 134 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

லக்னோவில் நடைபெற்ற நேற்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன் எடுத்தது. அந்த அணியின் சார்பில் குவிண்டின் டிகாக் 109 ரன்னும், ஏய்டன் மர்க்ரம் 56 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 41.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக லபுஷேன் 46 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் ரபடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக டிகாக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE