உலகக் கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை பழித்தீர்க்குமா இலங்கை... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை இலங்கை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் சரணடைந்தது. இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து எளிதாக எட்டிப்பிடித்தது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜோ ரூட், கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் பெரிய அளவில் இல்லை.

இதேபோல் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி முதலாவது லீக்கில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில் 156 ரன்னில் ஆப்கானிஸ்தானை மடக்கிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் வெற்றிக்கனியை பறித்தது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 5-ல் வங்கதேசமும் வெற்றி கண்டுள்ளன. உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் 4 முறை சந்தித்ததில் தலா 2 வெற்றியை பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் பிற்பகல் 2 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மோசமான தோல்வியில் இருந்து எழுச்சி பெற்று இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்துடன் இலங்கை வரிந்து கட்டும். இலங்கை வீரர்கள் பலர் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதால் அந்த அனுபவம் அந்த அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் ஒரு போதும் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 4 ஆட்டங்களில் முடிவு இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE