ஹரியாணா:என் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமும் எனது குழந்தை தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசியிருந்த நிலையில், அர்ஷத் நதீம் 92.97 தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். தங்கம் கை நழுவி போன வருத்தத்தில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை தேடிக்கொடுத்த நீரஜ் சோப்ராவின் வெற்றியை ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள அவரது குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது மகன் வெள்ளிப் பதக்கம் வென்றபோதிலும், அது தங்கத்திற்கு நிகரானது என சோப்ராவின் தாய் சரோஜ் தேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப் பதக்கம் வென்ற அந்த வீரரும் (அர்ஷத் நதீம்) எனது குழந்தை தான். அங்கு செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். நீரஜ் சோப்ரா வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு விருப்பமான உணவை நான் சமைத்து கொடுப்பேன்." என்றார்.
» எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது
» மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி தண்ணீர் திறப்பு
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி, அர்ஷத்தும் தன் மகன் தான் என்று கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சரோஜ் தேவியின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.