எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன் வினேஷ் போகத்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

By KU BUREAU

சென்னை: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை, வினேஷ் போகத், எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

வினேஷ், `எல்லா' வகையிலும் நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன். எதிலிருந்தும் மீண்டு வரும் உங்கள் திறன், வலிமை மற்றும் ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய உங்களது தனிச்சிறப்பான பயணம் ஆகியவை இந்தியாவின் லட்சக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளித்துள்ளன.

சில கிராம் எடை காரணமாகச் செய்யப்பட்ட தகுதி நீக்கம் உங்களது மன ஆற்றலையோ சாதனைகளையோ குறுக்கிவிடமுடியாது. நீங்கள் பதக்கத்தைத் தவறவிட்டிருக்கலாம். ஆனால், உங்களது இணையற்றமனவுறுதியினால் அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து: சென்னையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது,‘‘ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்தியர்கள் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 13 தமிழக வீரர்கள் குறித்து யாரும் அறியவில்லை. போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக வீரர்கள் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பார்கள்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE