தோனிக்குப் பிறகு ரோகித் ஷர்மாதான்... 2வது டெஸ்டின் சாதனைப் பட்டியல் இதோ!

By காமதேனு

இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. டி20 போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. இதையடுத்து டெஸ்ட் போட்டித் தொடர் துவங்கி நடைபெற்ற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

2வது டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா

இதையடுத்து நேற்று துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 153 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 80 ரன்களும் எடுத்து இந்த போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.

ஆட்டநாயகனாக தேர்வான முகமது சிராஜ்

இந்த வெற்றியின் மூலம் கேப்டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. மேலும் தென்னாபிரிக்காவில் இதுவரை இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. இருப்பினும் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்திருந்தது. அதன் பிறகு தற்போது ரோகித் தலைமையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் சமனில் முடிவடைந்துள்ளது.

2வது டெஸ்டுடன் ஓய்வுப்பெற்ற தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கார்

மேலும் இந்த போட்டி மிகக்குறைவான பந்துகளில் முடிவடைந்ததும் சாதனையாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக 1932ம் ஆண்டு ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி 656 பந்துகளில் முடிந்திருந்ததால், மிகக்குறுகிய டெஸ்ட் போட்டியாக இருந்து வந்தது. தற்போது 642 பந்துகள் மட்டுமே இந்த போட்டியில் வீசப்பட்டுள்ளதால் மிகக் குறுகிய பந்துகளில் ஆட்டம் முடிந்த டெஸ்ட் போட்டி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் வழக்கமாக டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறும் நிலையில், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மொத்தமாக சேர்த்து 4.5 நாட்கள் மட்டுமே நடைபெற்று உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி 1.5 நாளிலேயே முடிவடைந்துள்ளது. இதுவும் தற்போது சாதனையாக மாறி உள்ளது. இது மட்டுமின்றி இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இதேபோல் பும்ரா, முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராகியுள்ளார்.

இந்த தொடருடன் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டீன் எல்கார் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் முதல் போட்டியில் 186 ரன்கள் குவித்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இருப்பினும் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!

‘இரண்டு வருடமாக நீடிக்கும் விசாரணையில், தேர்தல் நெருக்கத்தில் சம்மன் அனுப்புவது ஏன்?’ கேஜ்ரிவால் கேள்வி

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தமிழகத்தில் மதுவால் கொலை அதிகரிக்கிறது... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE