19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மகளிர் ஹெப்டத்லானில் வெண்கலம் வென்ற நந்தினி அகசரா ஒரு திருநங்கை என்றும், போட்டியில் 4-ம் இடம் பிடித்த தனக்கு வெண்கலம் பதக்கம் தரவேண்டும் என சக இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மன் குற்றம் சாட்டியுள்ளார். மகளிர் 800 மீ ஹெப்டத்லான் விளையாட்டில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 'வெண்கலம் வென்ற நந்தினி ஒரு திருநங்கை என்பதால் விதிப்படி எனக்குதான் பதக்கம் தர வேண்டும் என இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளார்.
இதனிடையே, ஸ்வப்னாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள நந்தினி, தான் யார் என்பது தனக்கு தெரியும் என்றும், ஸ்வப்னா கூறியதற்கு அவர் ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், தான் தேசத்துக்காக விளையாடி பதக்கம் வென்றுள்ளதாகவும், இந்த சர்ச்சை குறித்து இந்திய தடகள கூட்டமைப்பிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது இந்திய வீரர் - வீராங்கனைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...