நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார்: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு வினேஷ் போகத் தகுதி!

By KU BUREAU

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 50 கிலோ எடைப்பிரிவில், தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் யுயி சுசாகியை 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் வினேஷ் போகத் வீழ்த்தினார். யுயி சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை நடக்கும் காலிறுதியில் ஒக்சானா லிவச் அல்லது அக்டெங்கேவை எதிர்கொள்கிறார் வினேஷ் போகத்.

29 வயதான வினேஷ் போகத் ரியோ ஒலிம்பிக் 2016ல் 10வது இடத்தையும், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்தார். முன்பு 53 கிலோ பிரிவில் போட்டியிட்ட வினேஷ், இந்த ஆண்டு 50 கிலோ பிரிவில் களமிறங்கினார்.

25 வயதான யுயி சுசாகி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான்கு போட்டிகளில் ஒரு புள்ளி கூட கைவிடாமல் தங்கம் வென்றார். சுசாகி தனது முழு மல்யுத்த வாழ்க்கையில் 34 போட்டிகளீல் மட்டுமே தோற்றுள்ளார். அதே நேரத்தில் 700 க்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றுள்ளார். அதேபோல சுசாகி 2017, 2019, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் தங்கத்தையும் வென்றார். அசைக்க முடியாத வீராங்கனையாகிய சுசாகியை வீழ்த்திய முதல் சர்வதேச மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் மாறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE