இலங்கைக்கு எதிரான போட்டி: இந்திய கிரிக்கெட் அணியில் 3 மாற்றங்களுக்கு வாய்ப்பு

By KU BUREAU

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாளை (ஆகஸ்ட் 7) விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் மிடில் ஆடர் தடுமாறியது. அதன் காரணமாக இலங்கைக்கு 2வது ஒருநாள் போட்டியில் எளிதான வெற்றி கிடைத்தது.

நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் 27 ஆண்டு கால வரலாற்றை இலங்கை திருத்தி எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு தான் இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஒரு தொடரில் கூட இந்தியாவை இலங்கை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ஷிவம் துபேக்கு பதிலாக ரியான் பராக் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கொழும்பு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருந்தது. துபே கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ரியான் பராக் சிறந்த தேர்வாக இருக்கலாம். இது தவிர ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரியான் அணியில் தேர்வு செய்யப்படலாம்.

இந்த ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் பங்களிக்க முடியவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் எடுத்த ராகுல், இரண்டாவது போட்டியில், இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து வெளியேறினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெறலாம். ரிஷப் அணிக்கு வந்தால், லெவன் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களின் பலம் அதிகரிக்கும்.

மேலும், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்படலாம். இவர் ஐபிஎல்லில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதுமட்டுமின்றி பேட்டிங்கின் மூலமும் ராணா பங்களிக்க முடியும். இதனால் மூன்றாவது போட்டிக்கு ராணா அணிக்குள் நுழைவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE