இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வினோத் காம்பிளி நடக்க முடியாமல் அவதிப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. அதிரடி பேட்ஸ்மேனான இவர் இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும், 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள வினோத் காம்ப்ளி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 262 ரன்களை காம்பிளி எடுத்துள்ளார்.
தற்போது 52 வயதாகும் வினோத் காம்பிளிக்கு கடந்த 2013-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டார். இதைத்தொடர்ந்து அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வினோத் காம்ப்ளி தற்போது நடக்க கூட முடியாத நிலையில் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பைக்கின் மீது சாய்ந்தபடி இருக்கும் அவரை சிலர் தாங்கிப் பிடித்தபடி அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அப்போது அவர் நடக்கவே முடியாமல் மிகவும் தடுமாறுகிறார். இந்த வீடியோவை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் வினோத் காம்ப்ளிக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைளையும் எழுப்பி வருகின்றனர்.
» இங்கிலாந்து புகலிடம் அளிக்கும் வரை ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா இடைக்கால அனுமதி!
» காலை வெட்ட சொன்னார்கள்: ‘தங்கலான்’ படவிழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்!