இந்திய ஹாக்கி வீரர் அமித் ரோஹிதாஸுக்கு தடை: ஒலிம்பிக் அரையிறுதியில் விளையாட முடியாது

By KU BUREAU

பாரிஸ்: நேற்றைய கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின்போது சிவப்பு அட்டை காட்டப்பட்டதால், இந்திய ஹாக்கி அணி வீரர் அமித் ரோஹிதாஸுக்கு ஜெர்மனிக்கு எதிரான இந்தியாவின் அரையிறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்தியா, கிரேட் பிரிட்டன் அணிகள் மோதின. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். பெனல்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் ஹர்மன்பிரீத். இதைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் வீரர் லீ மார்ட்டன் ஒரு கோலடித்து 1-1 என்ற சமநிலை அடைந்தது.

இதனிடையே இந்திய வீரர் அமித் ரோஹிதாஸுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்ட இறுதி வரை வேறு கோல்கள் விழாததால் 1-1 என்ற நிலையே நீடித்தது. இதைத் தொடர்ந்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

இதில் இந்திய வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றினர். ஆனால் கிரேட் பிரிட்டன் வீரர்கள் 2 வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினர். இந்திய அணியின் கோல்கீப்பர் ஜேஷ் அபாரமாக 2 முறை பந்துகளைத் தடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

நேற்றைய கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின்போது சிவப்பு அட்டை காட்டப்பட்டதால், இந்திய ஹாக்கி அணி வீரர் அமித் ரோஹிதாஸுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, செவ்வாய்கிழமை நடைபெறும் ஜெர்மனிக்கு எதிரான இந்தியாவின் அரையிறுதிப் போட்டியில் அவரால் விளையாட முடியாது.

நேற்றைய போட்டியில், ​​ரோஹிதாஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவரது ஹாக்கி மட்டை பிரிட்டன் வீரர் மீது பட்டது. இதனால் கள நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து இந்திய ஹாக்கி அணி மேல்முறையீடு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE