சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில் சூட் அவுட்டில் தோல்வியடைந்து நான்காவது இடம்பிடித்தார் மனு பாக்கர். இதனால் அவரின் மூன்றாவது பதக்கம் பெறும் கனவு முடிவுக்கு வந்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்பின் மீண்டும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலம் வென்று அசத்தினர். இதன் மூலமாக மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில், 25 மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றார். எனவே அவர் இந்த ஒலிம்பிக்கில் மூன்றாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய இறுதிச்சுற்றுப் போட்டியில் முதல் எலிமினேஷனில் 6வது இடம் பிடித்த மனு பாக்கர், 2வது எலிமினேஷனில் 3வது இடம் பிடித்தார். இதையடுத்து 3வது எலிமினேஷனில் 2வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார்.
4வது எலிமினேஷனில் 2வது இடத்தில் இருந்தார். கடைசியாக 28 புள்ளிகள் பெற 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலமாக 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து தொடரிலிருந்து வெளியேறினார் மனு பாக்கர். இன்றைய போட்டியில் 4ம் இடம்பிடித்து அவர் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.