பிரான்ஸில் தண்டவாளங்களுக்கு தீவைப்பு: ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க சதி?

By KU BUREAU

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரான்ஸில் அதிவேக ரயில்கள் இயங்கும் தண்டவாளங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன..

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. உலகமே எதிர்பார்க்கும் இந்நிகழ்வு தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரான்ஸின் பல்வேறு இடங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் மர்மக்கும்பல் தீ வைத்துள்ளது. குறிப்பாக வடக்கில் லில்லி, மேற்கில் போர்டோக்ஸ் மற்றும் கிழக்கில் ஸ்ட்ராஸ்பேர்க் போன்ற நகரங்களுடன் இணைக்கும் ரயில் இருப்பு பாதைகளில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயை அணைத்துள்ளனர். அதிவேக ரயில் சேவையை துண்டிக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த தீவைப்பு சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக பிரான்ஸின் மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில இடங்களில் ரயில் சேவை துண்டிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் பழுதான ரயில்கள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பயணிகளும் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரான்ஸ் ரயில்வே அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில்," நாட்டின் ரயில் சேவையைப் பாதிக்கச் செய்யும் வகையில் மர்மக் கும்பல் பல்வேறு வழித்தடங்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டும், துண்டிக்கப்பட்டு உள்ளது கண்டனத்திற்குரியது" என்றார். இந்த தாக்குதல் சம்பவத்தை பிரான்ஸ் விளையாட்டு துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெராவும் கண்டித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா தொடங்க உள்ள நிலையில், ரயில் சேவையைத் துண்டிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE