மலேசியா சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ போட்டியில் மதுரை வீரர்கள் தங்கம் வென்று சாதனை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மலேசியாவில் நடந்த சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்ட வீரர்கள் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 19 முதல் 21-ம் வரை நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 10 நாடுகளில் இருந்து 2,500-க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். பூம்சே, கியொருகி மற்றும் ஸ்பீடு கிக்கிங் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் அமெச்சூர் மதுரை மாவட்ட விளையாட்டு டேக்வாண்டோ சங்கம் சார்பில் 14 போட்டியாளர்கள் பங்கு பெற்று 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர்.

பூம்சே பிரிவில்ஷெரின் ஜெகனரா, ஜெய சிம்ம விருமன், உதய கிருஷ்ணன், பிரகாஷ் குமார் ஆகியோர் தங்கப்பதக்கம், கீர்த்திவாசன், ரோஹித் பாலன், கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங், கார்த்திக், ரகுராமன், வெள்ளி பதக்கம், நிகில், நாராயணன், கார்த்திக் ஸ்ரீராம், விஜய் அருணாச்சலம் வெண்கல பதக்கம் வென்றனர்.

கியொருகி பிரிவில் டால்பின் பள்ளியைச் சேர்ந்த ஷெரின் ஜெகனரா, ரோகித் பாலன், உதய கிருஷ்ணன் ஆகியோர் வெண்கல பதக்கம், கார்த்திக் ஸ்ரீராம் வெள்ளி பதக்கம், குயின் மீரா சர்வதேச பள்ளி மாணவன் ஜெய சிம்ம விருமன் வெண்கல பதக்கம், வேடிக் வித்யாஷ்ரம் மாணவன் நாராயணன் வெள்ளி பதக்கம், டெல்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி மாணவன் நிகில் வெண்கல பதக்கம்,லீ சட்லியர் பள்ளி மாணவன் கீர்த்திவாசன் வெண்கல பதக்கம்,சென்மேரிஸ் பள்ளி மாணவன் முத்து ஹரிஷ் வெண்கல பதக்கம் , ஸ்ரீஅரோபிந்தோ மீரா பள்ளி மாணவன் கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங் வெண்கல பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர் தத்தோ கிராண்ட்மாஸ்டர் பாலா மற்றும் டேக்வாண்டோ தலைமை பயிற்சியாளர் நாராயணன் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE