அர்ஜூன் டெண்டுல்கர்: அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையின் அசத்தல் ஆட்டம்!

By காமதேனு

ரஞ்சி தொடரில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான அதே சாதனையுடன், அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது ரஞ்சி சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஆச்சரியமான இந்த ஒற்றுமைக்கு இடைப்பட்ட காலம் 34 ஆண்டுகள்.

கோவாவில் நேற்று(டிச.13) தொடங்கிய ரஞ்சி கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள், அடுத்தாண்டு பிப்.20 வரை நடைபெற உள்ளன. நேற்று கோவா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் கோவா அணி சார்பில் விளையாடுகிறார்.

கோவா பேட்டிங் செய்ய, ஆட்டம் தொடங்கியது முதலே காற்று ராஜஸ்தான் பக்கமாகவே வீசியது. 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது வீரராக களமிறங்கிய அர்ஜூன், களத்திலிருந்த பிரபு தேசாயுடன் சேர்ந்து ஆச்சரியப்படும் வகையில் அடித்து விளையாடினார். பிரபு தேசாய் - அர்ஜூன் டெண்டுல்கர் ஜோடி 2 நாட்களாக போட்டியிட்டு ரன்களை குவித்துள்ளனர்.

இந்த வகையில், 120 ரன்களுடன் அர்ஜூனும், 212 ரன்களுடன் பிரபு தேசாயும் வெளியேறி உள்ளனர். இந்த ஜோடியின் பங்களிப்பால் 2 நாள் ஆட்டங்களில் 8 விக்கெட் இழப்போடு 493 ரன்களை குவித்து நிமிர்ந்து நிற்கிறது கோவா அணி. தொடரின் தொடக்கமே அமர்க்களமாய் இரட்டை சதமடித்த பிரபு தேசாயைவிட, அர்ஜூன் டெண்டுல்கரின் ஒற்றை சதம் பெரிதாய் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் தந்தை சச்சின் டெண்டுல்கர்.

1988-ல் இதேபோன்ற ரஞ்சி தொடரின் அறிமுக ஆட்டத்தின்போதே சதமடித்து சாதித்திருந்தார் சச்சின். குஜராத்துக்கு எதிரான பம்பாய் அணியின் ஆட்டத்துக்கு சச்சினின் கன்னி சதம் காபந்து செய்தது. தற்போதைய அர்ஜூன் போலவே அவரும் தாமதமாக 4வது ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்.

தற்போது 34 ஆண்டுகள் கழித்து தந்தை சச்சினின் சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் நினைவுகூரச் செய்திருக்கிறார் அர்ஜூன் டெண்டுல்கர். 1988, டிச.11 அன்று சச்சின் டெண்டுல்கர் சாதனையும்; 2022,டிச.14 அன்று அர்ஜூன் டெண்டுல்கர் சாதனையும் அரங்கேறி உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த ஒப்பீடு, உவகை தந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE