இலங்கை மண்ணில் புதிய சாதனையை படைப்பாரா விராட் கோலி?

By KU BUREAU

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 152 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களைக் கடந்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைப்பதற்கு இந்தியாவின் ரன் மிஷின் விராட் கோலிக்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிட லண்டன் சென்ற விராட் கோலி, இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. அவருடன் ரோகித் சர்மாவும் ஓய்வெடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தொடரிலும் விளையாட அனைத்து மூத்த வீரர்களுக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியிருந்தார். இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டபோது, ​​ஆச்சரியப்படும் விதமாக, அனைத்து மூத்த வீரர்களும் அணியில் இடம் பெற்றனர்..

கம்பீர் பயிற்சியாளராக வந்தவுடன், அவருக்கும் கோலிக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கும் என்றும், இது அணியைப் பாதிக்கும் என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்தனர். மேலும், கம்பீரை பயிற்சியாளராக தேர்வு செய்யும் முன் பிசிசிஐ விராட் கோலியிடம் கருத்து கேட்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இருப்பினும், பிசிசிஐ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, கம்பீருடன் தனக்கு ஏற்பட்ட சண்டைகளை மறந்துவிட்டு அவருடன் நன்றாக வேலை செய்வேன் என்று விராட் கோலி உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13,848 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் கோலி 152 ரன்கள் குவித்து 14 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்தால் இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் மூன்றாவது வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைக்கும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் 14, 000 ரன்களுக்கு மேல் குவித்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி18,426 ரன்களும், குமார் சங்கக்கார 404 போட்டிகளில் விளையாடி 14,234 ரன்களும் எடுத்துள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு உள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது.

இலங்கையில் விளையாட உள்ள இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் ( விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷதீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE