ஃபிஃபா உலகக் கோப்பையில் சிறப்பு சேர்க்கும் தீபிகா படுகோன்

By காமதேனு

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் முக்கிய அங்கமாக, இறுதிப் போட்டியில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையரில் ஒருவராக விளங்குபவர் தீபிகா படுகோன். ஷாருக் கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுடன் தீபிகா நடித்திருக்கும் ’பதான்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜன.25 அன்று வெளியாக இருக்கிறது. இது தவிர பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனுடனான ’புராஜெக்ட் கே’, கணவர் ரண்வீர் சிங்கின் ’சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களிலும் தீபிகா நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோன். இந்தியாவிலும் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் வாகை சூடியிருக்கும் பிரகாஷ் படுகோனை கௌரவிக்கும் வகையில் அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தந்தையை பின்பற்றி பேட்மிண்டன் பயிற்சியில் தீவிரமாக வளர்ந்த தீபிகாவை, அவரது அழகு சினிமாவில் கொண்டுபோய் சேர்த்தது. தற்போது திருமணமான பிறகும் பாலிவுட்டில் தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார் தீபிகா படுகோன்.

விளையாட்டில் தீரா ஆர்வம் கொண்ட தீபிகா படுகோன், உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் தடம் பதிக்க இருக்கிறார். கத்தாரில் நடக்க இருக்கும் இறுதி போட்டியின்போது, உலகக் கோப்பையை அறிமுகம் செய்யும் நட்சத்திரமாக சிறப்பிக்க உள்ளார். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற சிறப்பும் தீபிகா படுகோனைச் சேர்கிறது.

இதற்காக விரைவில் கத்தார் பறக்கும் தீபிகா படுகோன், டிச.18 அன்று லுசைல் மைதானத்தில் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார். இதனையொட்டி நடைபெறும் பிரம்மாண்ட விழாவிலும் அவர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE