இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவை வங்கதேசம் அணி வீழ்த்தியது. ஷாகிப் அல் ஹசனின் பந்துவீச்சு மற்றும் மெஹிடி ஹசனின் கடைசி நேர ஆட்டத்தால் அந்த அணி வெற்றிபெற்றது.
வங்கதேசத்தின் டாக்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 7 ரன்னில் ஆட்டமிழந்தார், தொடர்ந்து கோலியும் 9 ரன்னில் அவுட்டானார். ஓரளவு நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 27 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி குறைந்த ஸ்கோருடன் தத்தளித்தது. கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர்(19 ரன்கள்), ஷபாஸ் அஹமது (0), ஷர்துல் தாக்கூர்( 2 ரன்), தீபக் சஹார்(0), சிராஜ் (9 ரன்கள்), குல்தீப் சென்(2 ரன்) என வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் மட்டும் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். வங்க தேச வீரர் ஷாகிப் அல் ஹசன், இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, சுந்தர், தாக்கூர், சாஹர் ஆகிய 5 பேரை அவுட்டாக்கினார்.
187 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாண்டோவை டக்கவுட்டாக்கினார் தீபக் சாஹர். அதனைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் நிலைத்து ஆடி இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்தினார். தொடர்ந்து முகமது சிராஜ், குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 150 ரன்களில் 9 விக்கெட்டுகள் விழுந்ததால், இந்திய அணி முழுமையான வெற்றி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டில் ஆபத்பாந்தவன் போல மெஹிடி ஹசன் அதிரடி காட்டி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 46 ஓவர்களில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லிட்டன் தாஸ் 41 ரன்களும், மெஹிடி ஹசன் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 29 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக மெஹிடி ஹசன் தேர்வானார்.