வங்கதேசத்தின் சுழலில் சிக்கிய இந்தியா: ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை!

By காமதேனு

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக வங்கதேச பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிராக இடது கை சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 10-2-36-5 என்ற கணக்கில் புதிய சாதனையைப் படைத்தார். 10 ஓவர்களை வீசிய ஹசன், 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் இரு மெய்டன் ஓவர்கள் அடக்கம்.

இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10-0-57-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கில்ஸ் சாதனை படைத்திருந்தார். அவர் 10 ஓவர்களின் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

வங்கதேசத்தின் டாக்கா மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 7 ரன்னில் ஆட்டமிழந்தார், தொடர்ந்து கோலியும் 9 ரன்னில் அவுட்டானார். ஓரளவு நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 27 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி குறைந்த ஸ்கோருடன் தத்தளித்தது. கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர்(19 ரன்கள்), ஷபாஸ் அஹமது (0), ஷர்துல் தாக்கூர்( 2 ரன்), தீபக் சஹார்(0), சிராஜ் (9 ரன்கள்), குல்தீப் சென்(2 ரன்) என வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் மட்டும் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். வங்க தேச வீரர் ஷாகிப் அல் ஹசன், இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, சுந்தர், தாக்கூர், சாஹர் ஆகிய 5 பேரை அவுட்டாக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE