நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையிலான இன்றைய ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது, இரண்டாம் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சூழலில் மூன்றாவது போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக நிதானமாக ஆடினர். 22 பந்துகளை சந்தித்த கில் 13 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். இந்த நிலையில் கேப்டன் தவான் 45 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து பண்ட் (10 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் ( 6 ரன்), ஹூடா(12 ரன்) என அடுத்தடுத்து அவுட்டானார்கள். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். மறுபுறம் சஹார்(12 ரன்கள்), சாஹல்(8 ரன்கள்), அர்ஷ்தீப் சிங்(9 ரன்கள்) என அடுத்தடுத்து சரிந்ததால் 47.3 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சுந்தர் 51 ரன்களையும், ஸ்ரேயாஸ் 49 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் டரைல் மிட்செல் மற்றும் ஆடம் மில்னே தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சவுதீ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்த களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் பின் ஆலன் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்களின் இணையை பிரிக்கமுடியாமல் தவித்தனர். உம்ரான் மாலிக் ஆலனை அவுட்டாக்கினார், அவர் 54 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார். கான்வே 51 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், வில்லியம்சன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 18 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஒருவேளை மழை வராமல் இருந்திருந்தால் நியூசிலாந்து அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தியிருக்கும். தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கும். மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம் தொடர் நாயகனாக தேர்வானார்.
முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பாண்ட்யா, ராகுல், புவனேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா களமிறங்கியது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே இந்திய அணி சொதப்பியது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.