பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி @ ஐபிஎல்

By KU BUREAU

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று ஹைதராபாத்திலுள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில், புள்ளிக் கணக்கை உயர்த்தும் நோக்கத்தில் அந்த அணி விளையாடியது. அதே நேரத்தில் போட்டியிலிருந்து பஞ்சாப் வெளியேறி விட்ட நிலையில் அந்த அணிக்கு இது வெறும்சம்பிரதாய ஆட்டமாக அமைந்தது.

முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட் 27பந்துகளில் 46 ரன்களும் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்), பிரப்சிம்ரன் 45பந்துகளில் 71 ரன்களும் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), ரிலீ ரோசோவ் 24 பந்துகளில் 49 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) குவித்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

ஹைதராபாத் அணி தரப்பில் டி. நடராஜன் 2 விக்கெட்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ், வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இருந்தபோதும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மாவும், ராகுல் திரிபாதியும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 28 பந்துகளில் 66 ரன்களும் (5 பவுண்டரி, 6 சிக்ஸர்), ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) குவித்தனர்.

பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி 37 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களும் எடுத்தனர்.19.1 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள்எடுத்து வெற்றி கண்டது. இறுதியில் அப்துல் சமத் 11 ரன்களும், சன்விர் சிங் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 17 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE