அயர்லாந்தை அசால்டாக வென்றது நியூசிலாந்து: குரூப் 1 பிரிவு அணிகளில் டாப் யார்?

By காமதேனு

இன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை எளிதாக வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் மற்றும் டெவன் கன்வே ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்து விளையாடினர். கேப்டன் வில்லியம்சன் அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். டேரில் மிட்செலும் அதிரடியாக விளையாடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 35 பந்துகளில் 61 ரன்களும், ஃபின் ஆலன் 18 பந்துகளில் 32 ரன்களும், மிட்செல் 21 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணியின் ஜோஸ்வா லிட்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

186 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிர்னீ ஆகியோர் அதிரடியாக ஆடி நியூசிலாந்துக்கு கிலி ஏற்படுத்தினார். ஒருவழியாக போராடி இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்த பிறகு அயர்லாந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இதன்காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 37 ரன்னும், பால்பிர்னீ 30 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்தின் சார்பில் லாகி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், சான்ட்னெர் மற்றும் டிம் சவுதி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நியூசிலாந்தின் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்த வெற்றி மூலமாக நியூசிலாந்து அணி, 7 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE