சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது ஜிம்பாப்வே: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அபாரம்!

By காமதேனு

இன்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து ஜிம்பாப்வே அணி சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்தில் தொடக்க ஆட்டக்காரரான ஜார்ஜ் மன்சே நிலைத்து நின்று ஆடினார், ஆனால் மறுபுறம் அந்த அணியின் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மன்சே 54 ரன்களையும், காலம் மெக்லீடு 25 ரன்களையும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியின் தரப்பில் டெண்டால் சதாரா மற்றும் ரிச்சர்டு கராவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ரஸா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

133 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரெக்ல்ஸ் சக்ப்வா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மறுமுனையில் க்ரைக் எர்வினே பொறுப்பாக ஆடினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் சிக்கந்தர் ரஸா களமிறங்கி அதிரடியைக்காட்டினார். இதனால் 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எர்வினே 58 ரன்கள்களையும், ரஸா 23 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர். ரஸா ஆட்டநாயகனாக தேர்வானார்.

இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ‘பி’ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு அயர்லாந்து முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இந்தப்போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலமாக ஜிம்பாப்வே அணியும் உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ‘பி’ பிரிவில் இடம்பெற்ற ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் உலகக்கோப்பையை விட்டு வெளியேறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE