“ரோகித் சர்மாவை நான் தான் கேப்டனாக்கினேன் என்பதை மறந்து விட்டனர்” - சவுரவ் கங்குலி

By ஆர்.முத்துக்குமார்

2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற தோனிக்குப் பிறகு, இப்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதன் மூலம் 50 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா தட்டிச் சென்றுள்ளார்.

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மாவை கேப்டனாக்கியது கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போதுதான். இதைத்தான் சவுரவ் கங்குலி இப்போது குறிப்பிட்டு, ‘நான் தான் ரோகித் சர்மாவை கேப்டனாக்கினேன் என்பதை மக்கள் மறந்து விட்டனர்’ என்று கூறியுள்ளார்.

வங்காள மொழி ஊடகம் ஒன்றிற்கு கங்குலி அளித்த பேட்டியில் கூறியது: “ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியைக் கொடுத்த போது என்னை விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போது அவர் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இப்போது யாரும் என்னை அவதூறு பேசுவதில்லை. நான் தான் ரோகித் சர்மாவை கேப்டனாக்கினேன் என்பதை அனைவரும் மறந்துவிட்டனர்” என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.

சர்ச்சைக்குரிய விதத்தில் விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகினார். வரிசையாக டி20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலக நேரிட்டது. அணியில் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

அணியில் கோலி கோஷ்டி, ரோகித் கோஷ்டி என்று பிளவுகள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரவி சாஸ்திரி இருவரையும் அழைத்து எச்சரிக்கும் விதமாக ஒற்றுமையாக இருந்து அணியை மூத்த வீரர்களாக வழிநடத்துங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் எழுந்தன.

இப்படிப் பல சிக்கல்கள் எழுந்த நேரத்தில்தான் ஐசிசி கோப்பையை இந்தியா வெல்லவில்லை, 2013-க்குப் பிறகு வெல்லவில்லை போன்ற சர்ச்சைகள் ஊடகங்களிலும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் எழுந்தன.

இதனையடுத்தே ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. ரோகித் சர்மா வந்த பிறகு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது இந்திய அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பிறகு கடந்த ஆண்டு ஒருநாள் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இதோடு 50 டி20 போட்டிகளை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் சர்மா இப்போது சாதித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE