சென்னை: லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடந்து ஆடிய அந்த அணி சோயிப் மாலிக்கின் தடுப்பட்டத்தால் 156 ரன்கள் எடுத்தது. மாலிக் 41 ரன்கள், கம்ரன் அக்மல் 24 ரன்கள், மக்சூத் 21 ரன்கள், இறுதியாக தன்வீர் 19 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான், பவன் நேகி, வினய் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் பின் இலக்கை துரத்திய இந்திய அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 30 பந்துகளைச் சந்தித்த இந்திய வீரர் அம்பதி ராயுடு 50 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த குருகீரத் மான் 34 ரன்களும், யூசுப் பதான் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் யுவராஜ் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டமும் வென்றது. அம்பதி ராயுடு ஆட்ட நாயகன் விருதை வென்றார், யூசுப் பதான் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் காயம் காரணமாக நடக்க முடியாமல் நொண்டியபடி கதவைத் திறந்து கொண்டு நடப்பது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடற்தகுதியை கிண்டல் செய்வதாக சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
» ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம்: ஜுலை 19-ல் தொடக்கம்!
» இன்று 122-வது பிறந்தநாள்: காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர்!
ஏனெனில், பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காயம் அடைந்து ஆட்டத்தில் இருந்து விலகுகிறார்கள். இறுதிப் போட்டியில் மிஸ்பா உல் ஹக்கும் காயம் அடைந்தார். பின்னர் ராபின் உத்தப்பா மற்றும் சில வீரர்களின் உதவியுடன் மைதானத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.