இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஸ் செய்தது இந்திய பெண்கள் அணி.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்த ஒருநாள் போட்டி நடந்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி ஒயிட்வாஸ் செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் இங்கிலாந்து களம் கண்டது. டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும், தீப்தி சர்மா 68 ரன்களும் எடுத்து அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் கேதே க்ராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
170 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அரட்டி மிரட்டி அவுட்டாக்கினார்கள். அந்த அணியின் சார்பில் சார்லி டீன் மட்டுமே 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் ரேணுகா சிங் அதிரடியாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்தை இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக ரேணுகா சிங்கும், தொடர் நாயகியாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அவர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.