சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் சர்வதேச முன்னணி வீராங்கனைகள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி மைதானத்தின் சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. இந்த டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷ்யாவின் வர்வரா கிராசெவா, போலந்தின் மேக்டர் லினட், கனாடாவின் யூஜெனி புசார்ட், சீனாவின் குவாங் வாங்,சுவீடனின் ரெபக்கா பீட்டர்சன் உள்ளிட்ட பல சர்வதேச முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி உள்ளிட்ட வீராங்கனைகள் இதில் கலந்துகொள்கிறார்கள். இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் களம் காண்கின்றனர்.
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 2 கோடி ரூபாய் ஆகும். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தினசரி டிக்கெட் விற்பனை மைதானத்தில் கிடைக்கிறது. ரூ.100 முதல் ரூ.450 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.