3-வது டி 20-ல் இந்திய அணி வெற்றி: 23 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது

By KU BUREAU

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சிறப்பான செயல் திறனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில்49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில், 2 சிக்ஸர்கள்,4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தது.

2-வது ஆட்டத்தில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 9 பந்துகளில், 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம்அளித்தார். 4-வது வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசினார். சஞ்சுசாம்சன் 12 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வேஅணி தரப்பில் பிளெஸ்ஸிங் முஸாரபானி, சிகந்தர் ராஸா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 7 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது. வெஸ்ஸி மாதவெரே 1, மருமானி 13, பிரையன் பென்னட் 4, சிகந்தர் ராஸா 15, ஜோனாதன் கேம்பல் 1 ரன்னில் நடையை கட்டினர். எனினும் தியோன் மையர்ஸ், கிளைவ் மடாண்டே ஜோடி போராடியது. 80 ரன்கள் சேர்த்தஇந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். கிளைவ் மடாண்டே 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 64 ரன்கள் தேவையாக இருந்தன. ஆனால் அந்த அணியால் 40 ரன்களே சேர்க்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. தனதுமுதல் அரை சதத்தை அடித்த தியோன் மையர்ஸ் 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், வெலிங்டன் மசகட்சா 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3, அவேஷ் கான் 2, கலீல் அகமது ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வானார். 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது ஆட்டம் 13-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE