இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் - சரியான முடிவா?

By KU BUREAU

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் கம்பீர் உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமகால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகிலிருந்து பார்த்துள்ளார்.

தனது கரியர் முழுவதும் நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர் என்பதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன். இந்திய அணி குறித்த அவரின் தெளிவான பார்வையும், பரந்த அனுபவமும் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்துள்ளது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவரான கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் கூறும்போது, “ஆம்! கவுதம் கம்பீர்தான் சரியான நபர். ஆனால் கவுதம் கம்பீர் அந்த வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். கம்பீர் அரசியிலிலிருந்தும் விலகிவிட்டார். ஏனெனில் அரசியல் நிறைய நேரத்தைத் தின்றுவிடும். அவர் புத்திசாலியாக இருப்பதால் அரசியல் காலத்தை விழுங்கும் பணி என்பதைப் புரிந்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு அருமையான மகள்கள் உள்ளனர். கவுதம் கம்பீர், எளிமையானவர், நேர்மையானவர், மனதில் பட்டதை பேசக்கூடியவர். கடினமான நபர் அல்ல. தெளிவாகப் பேசுவார், தைரியமாக பேசுவார், பேசும் முன் இருமுறை யோசிப்பது என்ற தயக்கமெல்லாம் இல்லாதவர்.

இத்தகைய குணங்கள் இந்திய கிரிக்கெட் பண்பாட்டில் இல்லாதவை. எங்கள் கிரிக்கெட் பண்பாட்டில் நாங்கள் அடுத்தவரை புண்படுத்தாதவாறு கருத்துகளைச் சொல்வோம். ஆனால், கம்பீர் வித்தியாசமானவர். தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை முகத்துக்கு நேராகச் சொல்லி விமர்சிப்பவர். அதனால் அவரை அனைவருக்கும் பிடிக்கும். சில வேளைகளில் ஆக்ரோஷமாகிவிடுவார். இதே ஆக்ரோஷத்தை அணியினரிடத்திலும் கடத்தி வெற்றி உந்துதலை ஊட்டுவார்” என்றதும் குறிப்பிடத்தக்கது.

கம்பீருக்கு சர்வதேச தொடர் அளவில் பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், இரண்டு ஐபிஎல் அணிகளின் வழிகாட்டியாக இருந்துள்ளார். லக்னோ அணியின் வழிகாட்டியாக அந்த அணியை 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வைத்தார். தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேகேஆர் அணிக்கு மீண்டும் திரும்பிய கம்பீர், தனது தலைமையில் அணியை பிளே ஆப் சுற்று பட்டியலில் முதலிடத்தை பெற வைத்துள்ளார்.

தான் விளையாடிய காலத்தில் வெற்றிகரமான வீரராக இருந்தவர் கம்பீர். இந்தியா 2007ல் டி20 உலகக் கோப்பை வென்றபோதும், 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியவர் கம்பீர். இதுதவிர ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை ஏழு சீசனுகளுக்கு வழிநடத்திய கம்பீர் இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்ததோடு, ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியை தகுதிபெற வைத்தார். இதனால், இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரியான சாய்ஸ் என்ற அடிப்படையில் அவரை பிசிசிஐ அணுகியிருக்கிறது.

கேகேஆர் அணியை சாம்பியன் ஆக்கிய உத்திகள்: கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக ஐபிஎல் 2024-ல் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். கம்பீரின் அணுகுமுறை நட்பு ரீதியானதும் அதேவேளையில் ஆக்ரோஷமானதாகவும் கண்டிப்பானதாகவும் இருக்கும்.

2022, 2023 ஐபிஎல் தொடர்களில் 7-ம் நிலையில் முடிந்த கேகேஆர் இந்த முறை கோப்பையை வென்றதென்றால் அதில் கம்பீரின் பங்கு ஏராளம் என்பது உண்மை. கவுதம் கம்பீர் அணிக்கு ஒரு ஸ்திரத்தன்மையையும் ஓர் அமைப்பாக்கத்தையும் கட்டமைத்தார். கவுதம் கம்பீரின் ஒரு உள்ளீடு என்னவெனில் 2022, 23 போல் அல்லாமல் ஸ்திரமான ஓப்பனர்களை முதலில் கொண்டு வந்தார்.

2022-ல் பல ஓப்பனிங் சேர்க்கைகள் இருந்தன. 2023-ல் 7 வித்தியாசமான காம்பினேஷன்கள் தொடக்கத்தில் இருந்தன. ஆனால் இந்த முறை கம்பீர் மிகவும் கண்டிப்பாக சுனில் நரைனின் ஆக்ரோஷ அதிரடியைப் பயன்படுத்திக் கொள்ள அவரை மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டு வந்தார்.

இதோடு இங்கிலாந்தின் பில் சால்ட் சற்றும் எதிர்பாராத விதத்தில் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடினார். இதில் வேடிக்கை என்னவெனில் ஏலத்தில் பில் சால்ட்டை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதே. ஜேசன் ராய் விளையாட முடியாமல் போனது மறைமுக ஆசீர்வாதமானது, பில் சால்ட்டைக் கொண்டு வரச் செய்தார் கம்பீர். பில் சால்ட் 435 ரன்களை இந்த ஐபிஎல் தொடரில் விளாசியது சாதாரணமான பங்களிப்பல்ல.

இதில் மாஸ்டர் ஸ்ட்ரோக், சுனில் நரைனை ஓப்பனிங்கில் மீண்டும் கொண்டு வந்ததுதான். 482 ரன்களை அவர் விளாசியுள்ளார். இதில் 3 அரைசதங்கள் ஒரு சதமும் அடங்கும். அதேபோல் ஆந்த்ரே ரஸலின் ஆட்டத்தில் புது உற்சாகமும் புதுப்பொலிவும் அவர் ஃபீல்டிங்கிலும் புலியாகத் திகழ்ந்தது கவுதம் கம்பீர் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக, உந்துதலின் காரணமாக இருந்திருக்கலாம்.

குறிப்பாக, ஷார்ட் பிட்ச் பவுலிங்கில் கொல்கத்தா பேட்டர்களை முன்பு மடக்கி வந்தனர். இந்த முறை அந்த ஷார்ட் பிட்ச் பலவீனத்திலிருந்து மீண்டது. கம்பீர் மற்ற பயிற்சியாளர்களுடன் அமர்ந்து இந்த பலவீனத்தை வீரர்களிடம் பேசி தீர்வு கண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே போல் ரமந்தீப் சிங் என்பவரை ஒரு பினிஷராக உருவாக்கப்பட்டு அவரது ஸ்ட்ரைக் ரேட் 240 என்ற அளவுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த முறை ஷார்ட் பிட்ச் பவுலிங்கிற்கு எதிராக நரைன், ஸ்ரேயஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரஸல் அனைவருமே எந்த ஒரு பலவீனத்தையும் காட்டாமல் ஆடியதிலும் கம்பீரின் பங்கு அதிகம்.

அதேபோல் ரகுவன்ஷி, இந்தப் புது வருகையினால் ரிங்கு சிங்கிற்கு அமைதியான ஐபிஎல் தொடராக அமைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் வீரர்கள் சொதப்பினால் உடனே அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை கொண்டு வரும் போக்கு கொல்கத்தாவிடம் இல்லை. கம்பீர் வீரர்களிடத்தில் நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை தொடர்ந்து அளிக்கச் செய்துள்ளார். எனவேதான் இந்திய அணிக்கு ராகுல் திராவிட்டுக்குப் பிறகு கவுதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கின. இப்போது, அவரே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE