விஸ்வநாதன் ஆனந்துக்கு மேலும் ஒரு கெளரவம்!

By காமதேனு

இந்தியாவின் பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் 44-வது உலக செஸ் சாம்பியன் போட்டி அதில் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு வீரர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மற்ற எந்த நாட்டிலும் நடைபெற்ற போட்டிகளைவிட எல்லா வகையிலும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் பாராட்டி உள்ளனர். அதேபோல அவர்களை மகிழ்விக்க நடைபெறும் கலை நிகழ்ச்சிகளும் அவர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. அந்நிகழ்ச்சிகளில் அவர்களும் ஆர்வத்துடன் பங்கு பெற்று மகிழ்கின்றனர்.

இப்படி சிறப்பாக நடைபெற்றுவரும் போட்டிகள் நாளை மறுதினம் நிறைவடைகின்றன. இந்த நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் தேர்தலும் இன்று சென்னையில் நடைபெற்றது. பிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

இதில் தற்போது தலைவராக இருக்கும் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகளும், எதிராக 16 ஓட்டுகளும் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவுக்குப் பெருமையை தேடித் தந்துள்ள அவர் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE