நாக்-அவுட்டான சிஎஸ்கே; பிளே ஆஃப்க்கு ஆர்சிபி தகுதி

By KU BUREAU

பெங்களூரு: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணி எதுவென்ற ரேஸில் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சனிக்கிழமை அன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்களில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 219 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியை 200 ரன்களுக்குள் வீழ்த்தினால் மட்டுமே ஆர்சிபி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற வாய்ப்பு இருந்தது.

அதிரடி தொடக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆனார். டேரில் மிட்செல் 4 ரன்களில் அவுட் ஆனார். இக்கட்டான நிலையில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

61 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா ரன் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் வீசிய 13-வது ஓவரில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று நிதானமாக ஓடிய காரணத்தால் விக்கெட்டை இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 7 ரன்களில் அவுட் ஆனார். சான்ட்னர் 3 ரன்களில் வெளியேறினார். ஆர்சிபி கேப்டன் டூப்ளசி சிறப்பாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

15 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே. அப்போது களத்துக்கு வந்தார் தோனி. அவருடன் ஜடேஜாவும் இணைந்து இன்னிங்ஸை அணுகினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் விளாசிய தோனி, அடுத்த பந்தில் அவுட் ஆனார். அவர்கள் 25 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரை யஷ் தயாள் வீசினார்.

கடைசி நான்கு பந்துகளில் 1 ரன் மட்டுமே அவர் கொடுத்திருந்தார். 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதன் மூலம் ஆர்சிபி வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE