சவுரவ் கங்குலி 50: திக்கெட்டும் இந்தியாவின் புகழ்வளர்த்த ‘திமிர்க்காரர்’!

By கோபாலகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த ஜூலை 8 அன்று தனது 50 ஆம் அகவையை நிறைவுசெய்தார்.

இன்றைக்கு, 35 வயதைக் கடந்தவர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் நிலை நட்சத்திரங்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கங்குலி கிரிக்கெட் ஆடிய 1990-களில் கூட இது சாத்தியமாக இருக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களில் 35 வயதைக் கடந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 35 வயதைக் கடந்த ஒருவர் அணியில் இடம்பெற்றிருந்தால் அவர் ஒரு திறமைவாய்ந்த இளைஞருக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பைத் தடுத்துக்கொண்டிருக்கிறார் என்றே பார்க்கப்படும். உலகின் தலைசிறந்த இடக்கை மட்டையாளர்களில் ஒருவராகவும் இந்தியாவின் மிகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகவும் விளங்கியவர் கங்குலி. இந்திய அணியின் முகத்தையே மாற்றியமைத்த அணித் தலைவராகவும் விளங்கிய இவர், 35 வயதில் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் 36 வயதில் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட்டார். இடையில் கடந்துவிட்ட 15 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் உலகில் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தை பன்னெடுங்காலத்துக்கு முந்தைய காலமாக உணரச் செய்துவிட்டது. ஆனால் இன்று, சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை நீண்ட காலம் தக்க வைக்கும் அளவுக்கு இந்திய அணி முன்னேறியிருப்பதற்கான விதைகளை ஆழமாக விதைத்தவர்களில் கங்குலி முக்கியமானவர்.

கங்குலி திமிர் பிடித்தவர் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால், அவருக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்ததும் அந்தத் ‘திமிர்’ என்று வரையறுக்கத்தக்க அவருடைய நடவடிக்கைகள் தான்.

1972-ல் வங்க மண்ணில் பிறந்தவர் சவுரவ் கங்குலி. 1992-ல், மேற்கு இந்திய தீவுகளுக்கெதிரான 50 ஒவர் போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கிய கங்குலி மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியுடன் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவர் ‘திமி’பிடித்தவராகப் பார்க்கப்படதே முதன்மைக் காரணம் என்று சொல்லப்பட்டது. மாற்று வீரராக இருக்கும் இளம் வீரர்கள் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் நடைமுறையை கங்குலி பின்பற்ற் மறுத்தார் என்று கூறப்பட்டது. அரசகுடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அதுசார்ந்த ஆதிக்க உணர்வு இருப்பதாகவும் எப்போதும் கூறப்பட்டுவந்தது.

ஆனால் 2002-ல், இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வென்ற பிறகு, ’கிரிக்கெட்டின் மெக்கா’ என்று கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் அமர்ந்திருக்கும் பலகனியில் எழுந்து நின்று தன் டி-ஷர்ட்டை கழற்றி வெற்று உடம்புடன் வெற்றிக் களிப்பில் ஆரவாரம் செய்தார் கங்குலி.

அதற்கு முன்பு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றிருந்தது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றிருந்த நிலையில் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரைக் கைப்பற்றியது. அதைக் கொண்டாடும் விதமாக இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் ஆடுகளத்திலேயே தன்னுடைய டி-ஷர்ட்டைக் கழற்றி ஆரவாரம் செய்தார். அதற்கு பதிலடியாகவே கங்குலி இப்படிச் செய்தார். இதில் முக்கியமான வித்தியாசம் ஃபிளிண்டாஃப் அப்போதுதான் விளையாடத் தொடங்கியிருந்த வீரர்; கங்குலியோ இந்திய அணியின் கேப்டன்.

லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய டி-ஷர்ட்டைக் கழற்றிய தருணத்தை கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை வரையறுத்த தருணம் எனலாம். ஒருவர் கங்குலியை நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால், அவரை நிரிகாரிக்க முடியாது என்பதற்கான குறியீடுதான் அந்த நிகழ்வு. இந்திய அணி அதற்கு முன்பு இருந்ததைப் போல் அடித்தால் வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்கும் சோப்ளாங்கி அணி அல்ல என்பதை உலகுக்கு உறுதியாக உணர்த்தியது கங்குலி அணித் தலைவரான பிறகுதான். அதிரடி மட்டையாளர்களையும் எதிரணியை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி வெற்றிபெறும் அளவுக்கு அற்புதமான பந்துவீச்சாளர்களையும் தடுப்பாளர்களையும் கொண்ட அணியாக இந்திய அணியை வடிவமைத்தார் கங்குலி. அதற்கு முன்பு இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே அணியை வெற்றிபெறச் செய்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தருபவர்களாக இருந்தார்கள்.

வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஆசிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான் உள்ளிட்ட மிகச் சிறந்த வீரர்களை இந்திய அணியில் வளர்த்தெடுத்தவர் கங்குலி. இவர்களில் சேவாக் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர். தேவைப்படும்போது பந்தும் வீசி விக்கெட்களை எட்டுப்பார். யுவராஜ் சிங் அதிரடி இடைநிலை மட்டையாளர் என்பதோடு களத் தடுப்பிலும் அபாரமானவர். கைஃப் பொறுப்பான மட்டைவீச்சுடன் இடைநிலையை ஸ்திரப்படுத்துவார். அற்புதமான களத்தடுப்பாளரும்கூட. ஆசிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான் இருவரும் அதிவேகமாகவும் மிகுந்த துல்லியத்துடனும் பந்துவீசி எதிரணி மட்டையாளர்களை நிலைகுலையச் செய்யும் வேகப்பந்துவிச்சாளர்கள். ஹர்பஜன் சிங் கங்குலி கேப்ட்னாவதற்கு முன்பே அணிக்குள் வந்துவிட்டாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்துச் சிறப்பாக பயன்படுத்தியவர் கங்குலிதான்.

இப்படிப்பட்ட வீரர்களை தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து ஊக்குவித்து இந்திய அணியை சர்வதேச அளவில் மதிப்பு மிக்க அணியாக உயர்த்தினார் கங்குலி. 90களில் அரிதினும் அரிதாக சர்வதேச களங்களில் வெற்றிபெற்றுவந்த இந்திய அணி, கங்குலியின் தலைமைக் காலத்தில் சர்வதேச தொடர்களைக் கைப்பற்றத் தொடங்கியது.

இது மட்டுமல்லாமல் ஆடுகளத்திலும் களத்துக்கு வெளியேயும் இந்திய அணியை வம்புக்கிழுக்கும் சர்வதேச வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பதும் கங்குலியின் காலத்தில்தான் தொடங்கியது. தென் ஆப்ரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் பந்துவீசும்போது வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்களுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. அப்போது உலகின் தலைசிறந்த அணியாக கோலோச்சிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வா சச்சின் மிதான குற்றச்சாட்டு குறித்து குத்தலாக ஏதோ சொன்னார். அதற்கு மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றினார் கங்குலி. “வா தன் வாயை மூடிக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை கவனிக்கும் வேலையைப் பார்க்கட்டும்” என்றார். களத்துக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் இந்திய அணியை மட்டம்தட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் கங்குலி.

கங்குலி சிறந்த கேப்டன் மட்டுமல்ல தரமான மட்டையாளரும் தேவைப்படும்போது அணிக்கு கைகொடுத்து உதவும் மிதவேகப் பந்துவீச்சாளரும்கூட. 1992-ல் ஒரே ஒரு போட்டியில் விளையாடிவிட்டு அணியிலிருந்து வெளியேறியவர், 1996-ல் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களையும் விளாசினார்.

ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களையும் டெஸ்ட்டில் 71 விக்கெட்களையும் கைப்பற்றியவர் கங்குலி. அவர் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் ‘ஆஃப் பக்கத்தின் அரசன்’ (King of OffSide) என்று புகழப்பட்டார். அந்த அளவுக்கு மட்டையாட்டத்தின் போது ஆஃப் பக்கத்தில் பந்துகளைப் பறக்கவிடுவதில் ஜித்தர். இமாலய சிக்ஸர்களைப் அடிப்பதிலும் கங்குலி கில்லாடி. அதே சமயம் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி நீண்ட நேரம் விளையாடி ரன் குவிக்கும் திறமையும் அவருக்கு வாய்த்திருந்தது.

கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003-ல் தென் ஆப்ரிக்காவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றது. அதில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார் கங்குலி. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கைக்கு அருகே வந்த உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டதற்கு கங்குலியின் டாஸ் முடிவும் ஒரு காரணம் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது.

கங்குலியால் அணிக்கு பயிற்சியாளராக அழைத்துவரப்பட்ட ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரேக் சாப்பல் கங்குலியை ஓரங்கட்டத் தொடங்கினார். சாப்பலுடனான பிணக்கு கங்குலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ராகுல் திராவிடுக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தலைமையை ஏற்றதும் சீனியர் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டனர். வேகமாக ஓட முடியாததால் களத் தடுப்பில் மூத்த வீரர்கள் பின்தங்கியிருக் கிறார்கள் என்று தோனி வெளிப்படையாகவே கூறினார். வயதும் கங்குலிக்கு சாதகமாக இல்லை. மட்டைவீச்சிலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

ஒரு விளையாட்டு வீரராக கங்குலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 15 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. உண்மையில் இன்றைக்கு இருப்பது போன்ற ஃபிட்னஸ் முனைப்பும் அது தொடர்பான பயிற்சி முறைகளும் நவீன வசதிகளும் இருந்திருந்தால் கங்குலி இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டையாளராகத் தொடர்ந்திருப்பார்.

மிகச் சிறந்த மட்டையாளராகவும் இந்திய அணியின் முகத்தை மாற்றி இந்திய அணி சர்வதேச அளவில் மிகச் சிறந்த அணியாக உருவெடுப்பதற்கான விதைகளை விதைத்த கேப்டனாகவும் இருந்த கங்குலி இப்போது இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ-யின் பிரெசிடென்ட்டாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. கங்குலியைப் போன்ற ஒருவரின் தலைமை அவற்றில் சிலவற்றையாவது செய்து முடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE