யூரோ கோப்பை கால்பந்து தொடர்: கால் இறுதி சுற்றில் கால்பதித்தது ஸ்பெயின்

By KU BUREAU

கொலோன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜார்ஜியாவை 4-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி.

யூரோ கோப்பை கால்பந்துதொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதன் நாக் அவுட் சுற்றில்கொலோன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜார்ஜியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டானி கார்வாஜலின் கிராஸை பெற்ற பெட்ரி இலக்கை நோக்கி தட்டிவிட்டார். ஆனால் ஜார்ஜியா கோல் கீப்பர் ஜியோர்கி மமர்டாஷ்விலி கோல் விழவிடாமல் தடுத்தார். 10-வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸின் கிராஸை பாக்ஸின் இடதுபுறத்தில் இருந்து தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க முயன்றார் ஸ்பெயினின் டானி கார்வாஜல். ஆனால் ஜார்ஜியா கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தார்.

16-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து ஸ்பெயினின் லாமின் யாமல் அடித்த பந்தை இலக்கிற்கு மிக அருகில் நின்ற அய்மெரிக் லாபோர்டே தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து இடதுபுறம் விலகிச் சென்றது. 18-வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் ஒட்டார் ககாபட்ஸே விரைவாக பந்தை கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் கிராஸ் செய்தார். அங்கு ஸ்பெயின் வீரர் ராபின் லு நார்மண்ட் பந்தை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றார். ஆனால் அது கோல் வலைக்குள் பாய்ந்தது. இந்த சுய கோல் காரணமாக ஜார்ஜியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

22-வது நிமிடத்தில் ரோட்ரி உதவியுடன் பந்தை பெற்ற ஸ்பெயினின் ஃபேபியன் ரூயிஸ் இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் கோல் கீப்பர் அதை அபாரமாக தடுத்தார். 35-வது நிமிடத்தி மார்க் குகுரெல்லா, 38-வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்காமல் போனது.

39-வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸிடம் இருந்து பந்தை பெற்ற ரோட்ரி ஜார்ஜியா டிபன்டர்களுக்கு ஊடாக பந்தை அடித்து கோல் வலைக்குள் திணித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

50-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் லாமின் யாமல் இலக்கை நோக்கி வலுவாக அடித்த ஷாட்டை, ஜார்ஜியா கோல்கீப்பர் பாய்ந்து தடுத்தார். 51-வது நிமிடத்தில் லாமின் யாமல் அடித்த பந்தை ஃபேபியன் ரூயிஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 74-வது நிமிடத்தில் கார்வாஜல், டேனி ஆகியோரது உதவியுடன் பந்தை பெற்ற லாமின் யாமல் இலக்கை நோக்கி தட்டிவிட்டார். அப்போது ஜார்ஜியா வீரர் க்வெலேசியானி குறுக்கிட அவர் மீது பட்டு சுய கோல் ஆனது. ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.

எனினும் அடுத்த நிமிடத்தில் தனது 3-வது கோலை அடித்து ஸ்பெயின் அசத்தியது. ஃபேபியன் ரூயிஸ் தொலை தூரத்தில் இருந்து அடித்த பந்தை பெற்ற நிக்கோ வில்லியம்ஸ் விரைவாக கடத்திச் சென்று ஜார்ஜியா அணியின் டிபன்டருக்கு போக்குக்காட்டி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

83-வது நிமிடத்தில் ஒயர்சபால் உதவியுடன் பந்தை பெற்ற டேனி ஓல்மோ கோல் அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. எஞ்சிய நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் ஜெர்மனியை சந்திக்கிறது ஸ்பெயின் அணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE