‘அல்மோராவிலிருந்து பால் மிட்டாய் கொண்டுவாருங்கள் எனப் பிரதமர் மோடி கேட்டார்!’

By காமதேனு

மே 15-ல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தோனேசிய அணியை வென்றதன் மூலம் முதன்முறையாக அக்கோப்பையைக் கைப்பற்றியது இந்திய ஆண்கள் அணி. இதற்கு முன்னர் 14 முறை தாமஸ் கோப்பையை வென்ற இந்தோனேசிய அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையை இந்தியா நிகழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய பேட்மின்டன் அணி புதிய வரலாற்றை எழுதியிருப்பதாகப் பிரதமர் மோடி ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், தாமஸ் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய பேட்மின்டன் அணியினர் இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். ‘ஆம், நம்மால் முடியும்’ எனும் மனஉறுதியுடன் இந்திய அணி விளையாடியதாகப் பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமரைச் சந்தித்த லக்‌ஷ்யா சென், “சிறிய விஷயங்களைக்கூட அவர் கவனிக்கிறார். அல்மோராவின் பால் மிட்டாய் மிகப் பிரபலமானது என்பதை அவர் அறிந்துவைத்திருக்கிறார். அதை வாங்கி வருமாறு என்னிடம் அவர் கேட்டிருந்தார். அவருக்காக அதை வாங்கிவந்தேன். என் தந்தை, தாத்தா ஆகியோரும் பேட்மின்டன் விளையாடுவார்கள் என்பதையும் பிரதமர் மோடி அறிந்துவைத்திருக்கிறார். இந்தச் சிறிய விஷயங்கள் மிக முக்கியமானவை. இவ்வளவு பெரிய மனிதர் இதுபோன்ற விஷயங்களை நம்முடன் பேசுவது பெரிய விஷயம். அவருடன் பேசியது இனிமையான அனுபவம்” எனக் கூறியிருக்கிறார்.

லக்‌ஷ்யா சென் உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE