காமா பயில்வான் தெரியுமா? - டூடுல் வெளியிட்டு கெளரவப்படுத்திய கூகுள்!

By காமதேனு

பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில், உள்ளூர் ரவுடிகளைப் பந்தாடும் பயில்வான் பாத்திரத்தில் நடித்த கல்லாப்பெட்டி சிங்காரம், அடிவாங்கி அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் அவர்களிடம், “காமா பயில்வான் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவரோட ஒரே சிஷ்யன் சோமா பயில்வான்... சாட்சாத் நான்தான்” என அதிரடியாகத் தன்னை அறிமுகம் செய்துகொள்வார்.

அந்த காமா பயில்வான் உண்மையிலேயே மல்யுத்தத்தில் பெரும் புகழ்பெற்றவர். ‘தி கிரேட் காமா’ என்று அழைக்கப்பட்டவர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், இன்றைய தினம் டூடுல் வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது கூகுள்.

1878 மே 22-ல் அமிர்தரஸில் பிறந்த காமா பயில்வானின் இயற்பெயர் குலாம் முகமது பக்‌ஷ் பட். மல்யுத்த வீரர்கள் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த காமா பயில்வான், அவர்கள் வழியில் சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்தவர், 1910-ல் உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர்.

10 வயதிலேயே தினமும் 500 முறை பைடக் (பஸ்கி), 500 தண்டால் எனக் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டவர். 1888-ல் ஒரு பஸ்கி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை வென்று முதல் பரிசைப் பெற்றது அவரது ஆரம்பகாலப் பெருமிதங்களில் ஒன்று.

1902-ல் சுமார் 1,200 கிலோ எடையுள்ள பாறையைத் தூக்கி நிறுத்தி அசத்தியவர் அவர். அந்தப் பாறை தற்போது வடோதரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

மல்யுத்தத்தில் உலக சாம்பியனாகத் திகழ்ந்த ரஹீம் பக்‌ஷ் சுல்தானிவாலா எனும் வீரர் ஏறத்தாழ ஏழடி உயரம் கொண்டவர். 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட காமா பயில்வான் அவருடன் நான்கு முறை மல்யுத்தத்தில் மோதியிருக்கிறார். மூன்று முறை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. நான்காவது முறை காமா பயில்வான் வென்றார்.

வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, காமா பயில்வானுக்கு வெள்ளியில் செய்யப்பட்ட தண்டாயுதத்தை அன்பளிப்பாக அளித்தார். தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடியேறிய அவர், தனது இறுதி நாட்களில் லாகூரில் வசித்தார். 1960-ல் மறைந்தார்.

காமா பயில்வான் குறித்த கட்டுரைகளைப் படித்து வியப்படைந்த புரூஸ் லீ, அவர் பின்பற்றிய உடற்பயிற்சி முறைகளைத் தானும் பின்பற்றினார். அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார்.

வெள்ளி தண்டாயுதத்துடன் அவரது ஓவியத்தை டூடுலாக வெளியிட்டிருக்கிறது கூகுள். இதை வடிவமைத்தவர் விருந்தா ஸவேரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE