அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி

By KU BUREAU

பார்படாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29, நிதிஷ் குமார் 20, மிலிந்த் குமார் 19, ஷேட்லி வேன் ஷால்க்வைக் 18, அலி கான் 14 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஆந்த்ரே ரஸ்ஸல், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

129 ரன்கள் இலக்குடன் பேட்செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ஷாய் ஹோப் 39 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 12 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். முன்னதாக ஜான்சன் சார்லஸ் 15 ரன்களில் ஹர்மீத் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. நிகர ரன்ரேட் விகிதம் 1.814 வைத்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை (24-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE