பில் சால்ட் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசல்: மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து | T20 WC

By KU BUREAU

செயின்ட் லூசியா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரரான பில் சால்ட் 87 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.

செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், கேப்டன் ரோவ்மன் பொவல் 17 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 15 பந்துகளில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களும் சேர்த்தனர்.

தொடக்க வீரரான பிரன்டன் கிங் 13 பந்துகளில், 23 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவர்பிளேவில் 54 ரன்களையும் அடுத்த 9 ஓவர்களில் 83 ரன்களையும், கடைசி 5 ஓவர்களில் 43 ரன்களையும் சேர்த்தது.

அந்த அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் ஆதில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒட்டுமொத்தமாக 51 பந்துகளை ரன் சேர்க்காமல் விட்டது. இதில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 12 டாட் பந்துகளையும், ஆதில் ரஷித் 10 டாட் பந்துகளையும் வீசியிருந்தனர். ஆதில் ரஷித் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். சாம் கரண் (9), ரீஸ் டாப்லி (8), மார்க்வுட் (7) ஆகியோரும் தங்களது பங்குக்கு டாட் பந்துகளை வீசியிருந்தனர். அதிக அளவிலான டாட் பந்துகளை எடுத்துக் கொண்டதும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பை வெகுவாக பாதித்தது.

181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பில் சால்ட் 47 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 44 பந்துகளில் 97 ரன்கள் குவித்தது.

பில் சால்ட் 7 ரன்களில் இருந்த போது அகீல் ஹோசைன் வீசிய பந்தில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் தவறவிட்டிருந்தார். இதற்கான பலனை மேற்கு இந்தியத் தீவுகள் அணி அனுபவித்தது. முன்னதாக கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ராஸ்டன் சேஸ் பந்திலும், மொயின் அலி 13 ரன்களில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, சர்வதேச டி 20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு (8) முட்டுக்கட்டை போட்டது. இந்த தோல்வியால் அந்த அணியின் நிகர ரன் ரேட் விகிதம் -1.343 ஆக உள்ளது.

அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் மேற்கு இந்தியத் தீவுகள் தனது கடைசி 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE