பாகிஸ்தான் மகளிர் அணியை தெறிக்கவிட்ட இந்திய வீரர் பூஜா

By காமதேனு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 67 ரன்கள் விளாசிய இந்திய வீராங்கனை பூஜா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா டக் அவுட் ஆனநிலையில், தீப்தி சர்மா களமிறங்கினார். இவருடன் ஸ்மிர்தி மந்தனா ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. மந்தனா 52 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் மித்தாலி ராஜ் (9), ஹர்மேன்பிரீத் (5), ரிச்சா (1) ஆகியோர் சொற்ப ரன்னிகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டிருந்தது. ஆனால், ஸ்னே ரானா- பூஜா வாஸ்ட்ராகர் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். 59 பந்தில் 67 ரன்கள் விளாசிய பூஜா வாஸ்ட்ராகர் சனா பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 8 பவுண்டரிகளை அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய ரானா 48 பந்தில் 53 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி கெயக்வாட் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஜூலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ராணா தலா 2 விக்கெட்டையும், தீப்தி சர்மா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 67 ரன்கள் விளாசிய பூஜா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE