பாராலிம்பிக்கிலும் புறக்கணிப்பு: சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய வீரர்கள்!

By காமதேனு

குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (மார்ச் 4) தொடங்குகின்றன. மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக ரஷ்யா, பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியிருந்தது. தேசியக் கொடி உள்ளிட்ட தேசிய அடையாளங்கள் இல்லாமல் அவர்கள் பங்கேற்கலாம் என கமிட்டி கூறியிருந்தது. எனினும், போட்டி தொடங்குவதற்கு முந்தைய தினமான நேற்று அந்த அனுமதி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் கிராமத்தில் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக உருவான மனநிலை அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, ரஷ்யா, பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். மாறாக, உக்ரைன் வீரர்கள் சொந்த மண்ணில் போர் நடக்கும் சூழலில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தடை, தண்டனை

அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கா ரஷ்யா பல்வேறு வகைகளில் தண்டிக்கப்படுகிறது; தனிமைப்படுத்தப்படுகிறது. பொருளாதாரத் தடை விதிப்பதில் ஆரம்பித்து, விளையாட்டுப் போட்டிகளில் அனுமதி மறுப்பது வரை மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி தருகின்றன.

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபா, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான யூஇஎஃப்ஏ ஆகிய முக்கிய அமைப்புகள் ரஷ்யக் கால்பந்து அணிக்குத் தடைவிதித்திருக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பங்களிப்பை நல்குபவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான ‘ஒலிம்பிக் ஆர்டர்’ விருது ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யத் துணைப் பிரதமர் திமித்ரீ செர்னிஷென்கோ, ரஷ்ய அதிபரின் செயல் அலுவலகத்தின் தலைவர் திமித்ரீ கொஸாக் ஆகியோருக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தது. உக்ரைன் மீதான போருக்குப் பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அந்த விருதைத் திரும்பப் பெறுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு அறிவித்திருக்கிறது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்றும் சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டிருக்கிறது. தடகளம், டென்னிஸ், கார் பந்தயம் என ஏறத்தாழ எல்லா விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ரஷ்யா விலக்கி வைக்கப்படுகிறது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு உடந்தையாக இருந்த பெலாரஸும் இதுபோன்ற தடைகளை எதிர்கொண்டிருக்கிறது.

மாறிப்போன காட்சிகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய அதே பெய்ஜிங் நகரின் ‘பேர்ட்ஸ் நெஸ்ட்’ தேசிய விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டிகள் தொடங்குகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்ஸன்ஸ் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்துகொள்கின்றனர். பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் புதின் கலந்துகொண்டார்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலை - மனித உரிமை மீறல்கள், கரோனா அச்சுறுத்தல், கரோனா கட்டுப்பாடுகள் ஆகிய காரணங்களை முன்வைத்துப் பல்வேறு நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்தன.

அமெரிக்காவிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள், இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். ஆனால், உய்குர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, தொடக்க விழாவில் பங்கேற்க தனது சார்பில் யாரையும் அமெரிக்கா அனுப்பவில்லை. பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் ஒலிம்பிக் போட்டி தொடக்க / நிறைவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அப்போது, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் மேற்கத்திய நாடுகள் இவ்வாறு புறக்கணிப்பில் இறங்குகின்றன என புதின் விமர்சித்திருந்தார்.

முன்னதாக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை உக்ரைனில் தாக்குதலைத் தொடங்க வேண்டாம் என்று ரஷ்ய அதிகாரிகளிடம், சீன அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. எனினும், அமெரிக்காவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியூ பெங்க்யூ இதை மறுத்தார். “இந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாதங்கள், அடிப்படை ஆதாரம் இல்லாத வெற்று ஊகங்கள். சீனாவின் மீது பழி சுமத்துவதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறது” என்று அவர் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE