லீப்ஜிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லீப்ஜிக் மைதானத்தில் எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - செக் குடியரசு அணிகள் மோதின. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் புரூணோபெர்னாண்டஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து செக் குடியரசின் டிபன்டர்களுக்கு ஊடாககிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பந்தை தட்டிவிட அவர், மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் செக் குடியரசு கோல் கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து கோல் விழவிடாமல் தடுத்தார்.
ஜின்ட்ரிச் ஸ்டானெக் மீது பட்டுதிரும்பி வந்த பந்தை விதின்ஹா, இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். ஆனால் அதையும் ஜின்ட்ரிச்ஸ்டானெக் தடுத்தார். 45-வது நிமிடத்தில் ஜோவா கேன்சலோவிடம் இருந்து பந்தை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இலக்கை நோக்கி வலுவான ஷாட் அடித்தார். ஆனால் இம்முறையும் ஜின்ட்ரிச் ஸ்டானெக் முட்டுக்கட்டை போட்டார். முதல் பாதியில் இரு அணிகள்தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 58-வது நிமிடத்தில் ஃப்ரீகிக் வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் அடிக்கும் முயற்சியை ஜின்ட்ரிச் ஸ்டானெக் தடுத்தார்.
62-வது நிமிடத்தில் செக் குடியரசு வீரர் விளாடிமிர் கவுஃபல் உதவியுடன் பந்தை பெற்ற லூக்காஸ் புரோவோட் பாக்ஸ் பகுதிக்குவெளியே இருந்து கோல் வலையின் இடதுபுறத்தில் திணித்தார். இதனால் செக் குடியரசு 1-0 என முன்னிலை பெற்றது. 69-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் தலையால் முட்டிய பந்தை செக் குடியரசு கோல் கீப்பர் தடுத்த போது அதுஅவரது கையில் பட்டு திரும்பிய நிலையில் அருகில் நின்ற செக்குடியரசு வீரரான ராபின் ஹெரானக் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.
90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன் 2-வது நிமிடத்தில் பெட்ரோ நெட்டோவின் கிராஸை பெற்ற போர்ச்சுகல் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ உட்புற பாக்ஸ் பகுதியில் இருந்து அற்புதமாக கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பையில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
» மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
» ஓபிஎஸ்-ஐ யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அதிமுக பொது செயலாளர் பழனிசாமி திட்டவட்டம்