ஆரம்பமாகும் ஐபிஎல் கொண்டாட்டம்!

By கோபாலகிருஷ்ணன்

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கவிருக்கின்றன. பிப்ரவரி 12, 13-ம் தேதிகளில் பெங்களூருவில் இதற்கான ஏலம் தடபுடலுடன் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்வுகளும் முழுமையாகத் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பட்டன. அவற்றைப் பார்த்து, உடனுக்குடன் கிரிக்கெட் ரசிகர்கள் அணிகளின் வீரர்கள் தேர்வு குறித்த தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவுகளாகவும் மீம்களாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டனர்.

வீரர்களும் ஏலத்தில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியை, உடனடியாக ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். ஆக, ஐஎபில் போட்டிகளுக்கு இணையாக, ஐபிஎல் ஏலமும் ரசிகர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் நிகழ்வாக உருமாறியிருக்கிறது.

அதிகரிக்கும் பிரம்மாண்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) 2008 தொடங்கி, ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வசீகரமும் பிரம்மாண்டமும் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருந்தொற்றுக் காலத்தில், 2020, 2021 ஆண்டுகளில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்கள் முழுமையாகவோ பகுதி அளவிலோ கைவிடப்பட்டாலும் ஐபிஎல் போட்டிகள் மட்டும் கைவிடப்படவில்லை. 2020-ல் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் முழுமையாக நடந்தது. 2021-ல் இந்தியாவில் தொடங்கி, கரோனா இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால் இடையில் நிறுத்தப்பட்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் விட்ட இடத்திலிருந்து தொடங்கி நடத்தி முடிக்கப்பட்டது. இதிலிருந்தே, ஐபிஎல்லுக்குக் கிரிக்கெட் உலகில் அளிக்கப்பட்டுவரும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

போட்டிகளை நடத்தும் பிசிசிஐக்கும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் கோடிக்கணக்கான பணம் கொழிக்கும் விளையாட்டாக ஐபிஎல் உருமாறியிருப்பதே இதற்குக் காரணம். சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் தம் நாட்டு தேசிய அணிகளுக்கு விளையாடுவதைவிட, ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கே முன்னுரிமை அளிக்க விரும்புகின்றனர். காரணம், துட்டு!

எப்படி நடக்கிறது ஏலம்?

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் உரிமையாளருக்கும் 80 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அதில், குறைந்தபட்சம் 75 சதவீதம் அதாவது 60 கோடி ரூபாய் வரை அவர்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கச் செலவிட வேண்டும். ஒவ்வொரு அணிக்கான ஸ்குவாடில் குறைந்தபட்ச 18 முதல் 25 வீரர்கள் வரை இருக்க வேண்டும். இவர்களில் எட்டு பேர் மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக இருக்க முடியும் (ஒவ்வொரு போட்டியிலும் களமிறக்கப்படும் 11 வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள் நால்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்). ஒரு அணி, கடந்த ஆண்டு தனக்கு விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக ஐவரைத் தக்கவைத்துக்கொள்ளலாம். ஏலத்துக்கு முன்பே தக்கவைத்துக்கொள்ளலாம் அல்லது ஏலம் நடக்கும்போது வேறொருவர் கேட்ட அதிகபட்ச ஏலத்தொகையைக் கொடுத்து தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஓர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை, மூன்று ஆண்டுகள் வரை அந்த அணியில் விளையாட ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் முழுமையான ஏலத்தொகையைக் கொடுக்க வேண்டும். வீரருக்கான மவுசைப் பொறுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த வீரரைத் தக்கவைத்துக்கொள்வதற்கு கூடுதல் தொகையும் கொடுக்க நேரலாம்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே காயம் உள்ளிட்ட காரணங்களால் விலக நேர்ந்தால் அவர் ஏலத்தொகையை முற்றிலும் இழப்பார். போட்டிகளுக்கு இடையில் வெளியேற நேர்ந்தால், எத்தனை போட்டிகள் விளையாடினாரோ அதற்கேற்ப ஏலத்தொகையின் விகிதம் கணக்கிடப்பட்டு ஊதியமாகக் கொடுக்கப்பட வேண்டும். எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களும் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை. போட்டி நடக்கும்போது தேவை ஏற்பட்டால், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அணிக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

இஷான் கிஷன்

விலை உயர்ந்த வீரர்கள்

2022 ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்த அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த அணிகள் அனைத்தும், ஏலத்தில் மொத்தமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இவர்களில் 67 பேர் வெளிநாட்டு வீரர்கள். இத்தனை வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அனைத்து அணிகளும் சேர்ந்து செலவழித்துள்ள ஒட்டுமொத்த தொகை 551.7 கோடி ரூபாய். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய இஷான் கிஷன், இந்த ஆண்டு 15.25 கோடி ரூபாய்க்கு அதே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்த ஆண்டு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையை இவர் பெறுகிறார். தோனியைப் போலவே இவரும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்; விக்கெட்-கீப்பர்-மட்டையாளர் என்பதாலும் இவர், அடுத்த தோனியாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகத் தொகையைப் பெறும் வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர், ஆல்ரவுண்டர் தீபக் சஹர். இவரை, ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்து தக்கவைத்துக்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிக முறை கோப்பையை வென்றுள்ள இவ்விரு அணிகளும் முதல்முறையாக ஒற்றை வீரருக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தீபக் சாஹரும் இந்திய அணிக்கு விளையாடத் தொடங்கிவிட்டார்.

இதுவரை ஒருமுறைகூட இந்திய அணியில் விளையாடாத வீர்கள் ‘பிளேயர் அன்கேப்ட்’ (Uncapped Player) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இத்தகைய வீரர்களில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அணிமாறிய வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிவந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷார்துல் தாகுர், 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் அய்யர், இந்த ஆண்டு கொல்கத்தா அணியால் 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி, இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டனை 11.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் ஐந்து வீரர்களில், இவர் ஒருவர் மட்டுமே வெளிநாட்டவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான தொடக்க மட்டையாளராகக் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூப்ளஸியை, இந்த முறை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம், சிஎஸ்கே அணியுடன் 2011-ல் தொடங்கிய அவருடைய பயணம், இத்துடன் முடிவுக்கு வருகிறது. இது, சிஎஸ்கே ரசிகர்கள் பலரை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இப்படி ஒவ்வொரு அணியிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இளைய சாம்பியன்களுக்கு அங்கீகாரம்

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், வெற்றிவாகை சூடிய இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் சிலரும், இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் ராஜ் பாவா, பஞ்சாப் கிங்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் ராகுல் ஹங்ரேக்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. கேப்டன் யஷ் துல் 50 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடவிருக்கிறார். அதே நேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கி ஓட்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. பதின்பருவ வீரர்களை ஏலத்தில் எடுப்பதில், அனைத்து அணி நிர்வாகங்களும் சற்று தயங்கியதை உணர முடிந்தது.

திறமைக்கே முன்னுரிமை

சென்னை சூப்பர் கிங்ஸின் நம்பிக்கைக்குரிய மட்டையாளரும் ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா, இந்த முறை எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இதேபோல் சர்வதேச நட்சத்திர வீரர்களான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆரன் ஃபின்ச், இங்கிலாந்தின் இயான் மார்கன் உள்ளிட்டோரையும் எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்த சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய சர்வதேச வீரர்கள் பலர் ஒதுக்கப்பட்டிருப்பதும், சர்வதேச கள அனுபவமே இல்லாத இளைஞர்கள் மீது கோடிகள் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் ஐபிஎல்லில் திறமைக்கும் வெற்றியை உறுதி செய்யும் செயல்திறனுக்கும் மட்டுமே முன்னுரிமை என்பதை உறுதி செய்கின்றன. இந்தப் புதிய திறமைசாலிகளில் பலர், இந்திய அணிக்காக சர்வதேச் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

வலுவான அணிகளின் மோதல்

நான்கு முறை கோப்பையை பெற்ற மும்பை இந்தியன்ஸ், மட்டைவீச்சில் மிக வலுவான அணி. ஆர்ச்சர், பும்ரா ஆகிய உலகத் தரம் வாய்ந்த வேகவீச்சாளர்களையும் களமிறக்கவிருப்பது, மற்ற அணிகளுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விராட் கோலி, ஏபிடிவிலியர்ஸ் என அதிரடி மட்டையாளர்களைக் கொண்டிருக்கும் ஆர்.சி.பி அணிக்கு டூப்ளஸியின் வருகை, பலமடங்கு தெம்பூட்டியுள்ளது. இந்த முறையாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில், அவ்வணி மிகத் தீவிர முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. டூப்ளஸி, ரெய்னாவை இழந்தாலும் அணித் தலைவர் தோனி, அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தீபக் சாஹர் உள்ளிட்ட இளம் வீரர்களான, டுவெய்ன் பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு நட்சத்திரங்கள் என நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும் வலுவாகவே உள்ளது.

இரண்டு புதிய அணிகள் உட்பட அனைத்து அணிகளுமே, வலுவான அணிகளைக் கட்டமைக்கும் வகையில் ஏலத்தை நிறைவுசெய்துள்ளன. இந்த வருடம், சமமான பலம் கொண்ட 10 அணிகளுக்கிடையிலான மோதலாக ஐபிஎல் எப்போதும் போல் மிக சுவாரசியமாக இருக்கும் எனும் நம்பிக்கையை, இந்த ஏல நிறைவு ஏற்படுத்தியுள்ளது. இந்த நம்பிக்கை உண்மையாகுமா என்பது போட்டி தொடங்கிய பிறகுதான் தெரியவரும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE