முதல் டி20 போட்டி- இலங்கைக்கு 200 ரன் நிர்ணயித்தது இந்தியா

By காமதேனு

லக்னோவில் நடந்து வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டியிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா- இஷான் கிஷன் இணை களமிறங்கியது. தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய கிஷான் 2வது அரை சதத்தை விளாசினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ரோகித் சர்மா 32 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார்.

பின்னர் கிஷானுடன் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடியும் அதிரடியை காட்டியது. 3 சிக்சர், 10 பவுண்டரி என 56 ரன்னில் 89 ரன்கள் விளாசிய கிஷான், ஷனகா பந்தில் வீழ்ந்தார். பின்னர் ஜடேஜா களமிறங்கினார். இந்த ஜோடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியின் எண்ணிக்கையை 199 ஆக உயர்த்தியது. ஸ்ரேயஸ் ஐயர் 28 பந்தில் 57 ரன்னும், ஜடேஜா 4 பந்தில் 3 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. இதைத் தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE