உலக அளவில் அசத்தும் பதின்பருவ வீரர்கள்: உரிய அங்கீகாரம் கிடைக்குமா?

By கோபாலகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இந்த ஆண்டின் முதல் மகிழ்ச்சி செய்தி பிப்ரவரி 6 அன்று கிடைத்தது. 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சர்வதேச அணிகளுக்கிடையே நடத்தப்படும் உலகக் கோப்பையை, இந்தியா 5-ம் முறையாகக் கைப்பற்றியது என்பதுதான் அந்தச் செய்தி. மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2022-ம் ஆண்டின், ‘19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை’ இறுதிப் போட்டியில் இங்கிலாந்தைத் தோற்கடித்து, இந்திய பதின்பருவ வீரர்கள் சாம்பியன்கள் ஆகியிருக்கிறார்கள்.

தேவையும் வரலாறும்

இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான உலகக் கோப்பையின் வரலாற்றையும் அதன் தேவையையும் அறிந்துகொள்வது அவசியம். மற்ற பல குழு விளையாட்டுகளைப் போலவே கிரிக்கெட்டிலும் உள்ளூர், மாவட்ட, மாநில பிராந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பிறகே, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மாநில அளவிலான ரஞ்சி கோப்பை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களாகப் பிரித்து விளையாடப்படும் இரானி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவின் பிரதான கிரிக்கெட் அணிக்கான வீரர்களை அடையாளம் காண்பதற்கான போட்டிகளாகத் திகழ்கின்றன. 2008 தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் போட்டித் தொடரும், இளம் திறமைசாலிகளை அடையாளம் காண உதவுகின்றன.

இதுபோன்ற உள்நாட்டு அளவிலான போட்டிகளைத் தாண்டி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையும் திறமைகளை அடையாளம் காண உதவுகிறது. 19 வயதை நிறைவுசெய்யாத பதின்பருவ வீரர்களைக் கொண்ட தேசிய அணிகளுக்கிடையே நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை சர்வதேச ஆடுகளங்களில், முற்றிலும் அந்நிய சூழலில் விளையாடுவதில் திறமைமிக்க வீரர்களைக் கண்டறிய உதவுகிறது. ஏனென்றால், பிரதான கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படப் போகும் வீரர்கள், சர்வதேச ஆடுகளங்களிலும் சரிபாதி எண்ணிக்கையிலான போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், 16 வயதில் பிரதான கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கினார். ஹர்பஜன் சிங் 17 வயதில் தொடங்கினார். இதுபோல, சில உதாரணங்கள் இருந்தாலும் அனைவருக்கும் மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டிகளுக்கான பிரதான அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்க வேண்டுமென்றால், 10 வயதுக்கு முன்பிருந்தே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டாக வேண்டும். இத்தகைய சூழலில் பதின்மவயது கிரிக்கெட் நட்சத்திரங்களை சர்வதேச அணிக்கு அடையாளம் காண்பதற்கு உதவுவதோடு, அவர்கள் சர்வதேச அணியில் இடம்பெறும் லட்சியத்தை அடைவதற்கான முக்கியமான பாதையாகவும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் செயல்படுகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தேசிய அணிகளுக்கும் இது பொருந்தும்.

இந்தியாவின் சாதனைகள்

இந்தியாவைப் பொறுத்தவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் வெற்றிகளால் நிரம்பியது. 1988-ல் முதல்முறையாக இந்த உலகக் கோப்பை ‘இளைஞர் உலகக் கோப்பை’ எனும் பெயரில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு, 1998-லிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நடத்தப்பட்டுவருகிறது. ஆக, இதுவரை 14 உலகக் கோப்பைகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2000, 2008, 2012, 2018, 2022 என 5 முறை கோப்பையை வென்றுள்ளது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனைதான்.

இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்

இதைத் தவிர 3 முறை இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு தோற்றுள்ளது. இரண்டு முறை அரையிறுதிவரை முன்னேறியுள்ளது. 2016, 2018, 2020, 2022 என தொடர்ந்து 4 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கோப்பைகளில், ஒட்டுமொத்தமாக 69 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 49-ல் வென்றுள்ளது. 19-ல் மட்டுமே தோற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எய்தப்படவில்லை. எனினும், பொதுவாகவே இந்தச் சாதனைகள் உரிய கவனம் பெறுவதில்லை!

கரோனாவைத் தோற்கடித்த வெற்றி

2022 உலகக் கோப்பையில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது பல வகைகளில் அசாதாரணமானது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் கரோனா பெருந்தொற்றுச் சூழலில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால் போதுமான பயிற்சி ஆட்டங்களில் விளையாட முடியவில்லை. மே.இ.தீவுகளில் உலகக் கோப்பை தொடங்கிய பிறகு, முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் அடித்ததும், இடதுகை சுழலர் விக்கி ஓஸ்ட்வால் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதும் இந்திய அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டன.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ம் போட்டிக்கு இந்திய அணி தயாராகிக்கொண்டிருந்தபோது யாஷ் துல், துணை கேட்பன் ஷேக் ரஷீத் உள்ளிட்ட ஆறு வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அயர்லாந்து, உருகுவே அணிகளுக்கு எதிரான முதல்சுற்று போட்டிகள், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் லீக் போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி என பல போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிகளைப் பெற்றது. யாஷ் துல் அரையிறுதிப் போட்டியில் சதமடித்தார். இறுதிப் போட்டியில் ரஷீத் அரை சதம் அடித்த்தார். இருவரும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து அணியின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது!

முன்னாள் வீரர்களின் பங்களிப்பு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் தொடர் வெற்றிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. 2016-ல் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களின் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ராகுல் டிராவிட். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலிருந்து ஹனுமா விஹாரி, பிருத்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்ட சில திறமையான இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து இந்திய அணிக்கு அவர் அனுப்பியிருக்கிறார். தற்போது டிராவிட் பிரதான அணியின் தலைமைப் பயிற்சியாளராகிவிட்ட நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய மட்டையாளர் ரிஷிகேஷ் கனித்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே செயல்பட்டுவருகிறார்.

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண்

அதோடு, இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதற்காக, பெங்களூருவில் செயல்பட்டுவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மட்டையாளர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிக்காக, இந்திய அணியுடன் மே.இ தீவுகளுக்குச் சென்று ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். அணியின் வெற்றியை லட்சுமணுக்கும் இதர ஊழியர்களுக்கும் அர்ப்பணித்திருக்கும் ரஷீத், கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீரர்கள் அனைவரிடமும் லக்‌ஷ்மண் தினமும் தொலைபேசியில் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியதை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.

இலக்கை அடைந்த சிலர்

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான அணி, உலகக் கோப்பை போட்டிகளில் தவிர்க்க முடியாத சக்தியாக எப்போதும் திகழ்ந்துவந்துள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரின் கனவுகள் நிறைவேறாமலேயே கலைந்திருப்பதுதான் சற்றே வருத்தமளிக்கும் விஷயம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற அணியில் விளையாடியவர்களில் யுவராஜ் சிங், முகமது கைஃப், அஜய் ராத்ரா, ரிதீந்தர் சிங் சோதி, ஒய்.வேணுகோபால் ராவ், ரவீந்திர ஜடேஜா, எஸ்.கெளல், விராத் கோலி, எம்.கே.பாண்டே, எஸ்.எஸ்.திவாரி, சந்தீப் சர்மா, ஹனுமா விஹாரி, பிருத்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய 14 பேர் மட்டுமே பிரதான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் யுவராஜ் சிங், கைஃப், கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பல போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தினர். மற்றவர்கள் பலரும் 50-க்கும் குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளனர். இளம் வீரர்களான விஹாரி, ஷா, கில் ஆகியோர் வருங்காலங்களில் அதிகப் போட்டிகளில் விளையாடுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் எவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தினாலும், அது பயணத்தின் ஒரு மைல்கல்தானே தவிர அதுவே இலக்கு அல்ல.

ரஞ்சி போட்டிகள், ஐபிஎல். இந்திய ஏ அணியில் விளையாடும் வீரர்கள் என பல முனைகளிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணித் தேர்வு என்பது எப்போதும் கடும் போட்டி நிலவுவதாக இருந்துள்ளது. அரசியல் லாவணிகளுக்கும் பஞ்சமில்லை. ஆகையால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சாதிக்கும் பலர், பிரதான அணியில் இடம்பெறுவதற்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் வயதை எட்டிவிடும் அவலநிலை உள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் எவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தினாலும், அது பயணத்தின் ஒரு மைல்கல்தானே தவிர அதுவே இலக்கு அல்ல. அந்தப் போட்டிகளில் விளையாடும் பதின்பருவ வீரர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய இலக்கு, கனவு, லட்சியம் எல்லாம் பிரதான இந்திய அணிக்கு விளையாடுவதும் சர்வதேச அரங்கில் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும்தான். உலகக் கோப்பைப் போட்டிகளை வென்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பெருமைத் தேடித்தரும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்நாள் லட்சியம் மெய்ப்பட, பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE