அரசுப் பள்ளி மைதானத்தை கபளீகரம் செய்யும் புதிய கட்டுமானம்

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்தின் வாசல் பகுதிகளுக்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தின் சிலபகுதிகள் மாநகராட்சியால் கபளீகரம் செய்யப்பட்ட விவகாரத்தில், விளையாட்டு ஆர்வலர்கள் கொதித்துப் போயினர். அவர்களின் விடாமுயற்சியால் அந்த இடம் சர்வேயும் செய்யப்பட்டது. அந்தக் கொதிப்பு அடங்குவதற்குள், நாகர்கோவிலில் பாரம்பரியமிக்க சேது இலக்குமிபாய் அரசு உயர்நிலைப் பள்ளியின் மைதானத்தையும், அரசு வேறு தேவைக்காக கபளீகரம் செய்துள்ளது.

பள்ளிக்கூட மைதானத்தில் குவிந்து கிடக்கும் மண்

‘’மாலை முழுவதும் விளையாட்டு..” என்று மகாகவி பாரதியே விளையாட்டின் மேன்மையைப் பேசுகிறார். குழந்தைகளுக்கு ஏட்டுக்கல்வியோடு மட்டுமல்லாது, உடல் நலமும் பேணப்பட வேண்டும் என்பதால்தான், பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.

வாரத்துக்கு மூன்று வகுப்புகளுக்குக் குறையாமல் உடற்கல்வி வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதிகோரப்படும்போதும் பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தால் தான் அரசு அனுமதி வழங்குகிறது. இப்படியெல்லாம் கல்வித் துறை விதிகள் இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சேது இலக்குமி பாய் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விளையாட்டு மைதானத்தை அகற்றிவிட்டு, அரசு, அந்த இடத்தில் புதிய கட்டுமானத்துக்கான பணிகளைத் தொடங்கியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயின் ஷாஜி

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “மாநகராட்சிப் பகுதிக்குள் இப்போது இருக்கும் சூழலில் ஒரு புதிய மைதானம் கட்ட முடியுமா? காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு பிறந்த மாவட்டம் இது. ‘உடலை உறுதி செய்’ என்னும் அவரது வார்த்தையையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இங்கே மைதானத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட வருகிறார்கள். அதிலும் பள்ளிக்கூடங்களில் இருக்கும் மைதானங்கள் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பயனளிப்பது இல்லை. அந்தப் பகுதி முதியோர்களின் நடைபயிற்சி தொடங்கி, சீருடைப்பணியாளர் தொடங்கி இராணுவப் பணிவரை பல போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் அன்னையாக இருக்கிறது.

‘மைதானமே கோயில் விளையாட்டே தெய்வம்’ என தன் வாழ்வின் லட்சியமாக்கிக் கொண்ட பலநூறு இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால், அரசு தனது பிற தேவைகளுக்காக மிக எளிதாக அரசுப் பள்ளியின் மைதானத்தை கையகப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

சேது இலக்குமி பாய் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, 1949-ம் ஆண்டு முதலே இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதியான ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட பல பகுதிகளும் திருவிதாங்கூர் ராணி, சேது இலக்குமி பாய் அரசுக்கு தானமாக வழங்கியது. அதன் நினைவாகத்தான் இந்த அரசுப் பள்ளிகளுக்கும் சேது இலக்குமிபாய் என ராணியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலவசமாகக் கிடைத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்ப்பது போல் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, ஆரோக்கிய மேம்பாட்டுக்காக கிடைத்த இடத்தை அரசு, தன் பிற தேவைக்காக பயன்படுத்தத் துடிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தப் பள்ளி மாணவிகள் பரிசு பெற்றுவருகின்றனர். இத்தனை சிறப்பு வாய்ந்த இப்பள்ளியின் மைதானத்தை, திடீரென அரசு கபளீகரம் செய்துள்ளது. மைதானத்தில் ஆங்காங்கே குழிதோண்டி மண்ணைக் குவித்து வைத்துள்ளனர். பள்ளிகள் திறந்திருக்கும் இந்நேரத்தில் ஆங்காங்கே பள்ளி மைதானத்தில் குழிகளாகக் கிடக்கிறது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்புவரை 326 மாணவிகள் பயில்கின்றனர். இதனால் அவர்களின் பெற்றோரும் அச்சத்தோடு உள்ளனர்.

கரோனா காலத்துக்குப் பின், மக்களின் பொருளாதாரம் அகலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் மக்களின் கவனம் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பியுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு சேர்க்கை அளவும் கூடியிருக்கிறது. இப்படியான சூழலில் பள்ளியில் இருக்கும் சிறந்த மைதானத்தை வேறு பணிகளுக்கு, அரசுக் கட்டிடத்துக்கு எடுத்துக்கொள்வது என்பது அரசுப் பள்ளியில் வசதிக்குறைவை ஏற்படுத்தும் செயல். அரசு, இந்த இடத்தில் சிறைத் துறை சீர்திருத்தப்பள்ளி கொண்டு வருவதாகவும், விடுதி கட்டுவதாகவும் பலப்பல தகவல்கள் வருகிறது. அரசு, இதை உடனே நிறுத்தாவிட்டால் விளையாட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

கண்ணன்

சமூக ஆர்வலர் கண்ணன் கூறும்போது, ‘‘நாகர்கோவிலில் இந்தப்பள்ளிக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்குதான் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என 3 மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளி 4 ஏக்கர் 2 சென்ட் பரப்பைக் கொண்டது. விளையாட்டு ஆர்வம் உள்ள சிறுமிகள் தான் இங்கு அதிகம் பயில்கின்றனர். அரசு இவ்விசயத்தில் மெத்தனமாக இருந்தால், ஏழை மாணவிகளின் விளையாட்டுத் துறை சாதனைகளையும் அது கேள்விக்குள்ளாக்கிவிடும்’’ என்றார்.

இதனிடையே இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். சேது இலக்குமிபாய் மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிஸ்லி, சமூக ஆர்வலர் கலா ஆகியோர் இதுதொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில், இன்று 5 துறைகளுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மைதானத்தை காக்க மக்களுக்கு இருக்கும் இந்த விழிப்புணர்வு, அரசுக்கும் வந்துவிட்டால் விளையாட்டுத் துறையில் அரசுப் பள்ளி மாணவிகள் உயரப் பறப்பார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE