ஆக்ரோஷ நாயகனின் அதிர்ச்சிகர முடிவு!

By கோபாலகிருஷ்ணன்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் தோல்வி அடைந்த அடுத்த நாளான, ஜனவரி 15 அன்று மாலை நேரத்தில் கோலியிடமிருந்து அந்த அறிவிப்பு வந்தது. அது ஒன்றும் முற்றிலும் எதிர்பாராத அறிவிப்பல்ல. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் காலமும் அதற்கு வித்திட்டிருக்கக்கூடிய காரணிகளும்தான், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியும் குழப்பமும் வருத்தமும் அடையச் செய்துள்ளன.

2021 அக்டோபர்-நவம்பரில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு, இந்திய டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக செப்டம்பர் 16 அன்று அறிவித்தார் கோலி. 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது. இதையடுத்து, அணியின் மூத்த வீரரும் கோலி இல்லாத நேரங்களில் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவருமான ரோகித் ஷர்மா டி-20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதற்கடுத்து, டிசம்பர் மாதத்தில் 50 ஓவர் போட்டிகளுக்கும் ரோகித் ஷர்மாவே கேப்டனாகச் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. டி-20 கேப்டன் பதவி விலகலை அறிவித்தபோது, 50 ஓவர் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாகத் தொடர விரும்புவதாக கோலி கூறியிருந்த நிலையில், அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

கோலி

கோலியின் முக்கியத்துவம்

ஆனால், இந்தச் சர்ச்சைகளை எல்லாம் தாண்டி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெறும்வரை டெஸ்ட் அணிக்கு கோலிதான் கேப்டனாக பதவி வகிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அவர் பதவி விலகலுக்கு, ஆடுகளச் செயல்பாட்டைக் கடந்த காரணங்களே அதிகமாகப் பங்களித்திருக்கின்றன. அப்படி ஒன்றும் டெஸ்ட் போட்டியில் அவருடைய தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான தோல்விகளைச் சந்தித்துவிடவில்லை.

அண்மையில் நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்கத் தொடரில் தோல்வியடைந்திருந்தாலும், அதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வெல்வதற்கான விளிம்பில் இருந்தது. ஆனால், கரோனா அச்சத்தால் கடைசிப் போட்டி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. தென்னாப்பிரிக்கத் தொடரிலும், கோலி தலைமை வகித்த ஒரு போட்டியில் வெற்றியும் இன்னொரு போட்டியில் தோல்வியும் இந்தியாவுக்குக் கிடைத்தன. காயம் காரணமாக கோலி ஓய்வெடுத்துக்கொண்டதால் குறைந்த அனுபவம் கொண்ட வீரரான கே.எல்.ராகுல், இரண்டாம் போட்டிக்குத் தலைமை வகித்தார். அந்தப் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்திருந்ததால் தொடரை இழக்க நேரிட்டது. தென்னாப்பிரிக்கத் தொடரின் தோல்விக்கு கோலியின் தலைமையைப் பொறுப்பாக்க முடியாது என்பதோடு, கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் தலைமையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது.

சொல்லப்படாத காரணங்கள்

இத்தகைய சூழலில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகியிருப்பதற்கான காரணத்தை, கோலி வெளிப்படையாகக் கூறவில்லை. அதையொட்டி பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிசிசிஐ நிர்வாகத்துக்கும் அவருக்கும் இடையில் திரைமறைவு மோதல்கள் அதிகரித்துவருவதாக ஒரு தரப்பு கூறுகிறது. அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக, ட்விட்டரில் மதவாதிகள் தொடுத்த மோசமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது உட்பட, கோலியின் அண்மைக்கால செயல்பாடுகள் பலவும் இந்தியாவை ஆளும்கட்சியின் கருத்தியல் ஆதரவு தளத்துக்கு எதிராக அமைந்திருப்பதால், அவர் பழிவாங்கப்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிரான கருத்தியல் தளத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியதற்கும் அவர் குறித்த ஆளும்கட்சியின் அதிருப்தியே காரணம் என்றும் முணுமுணுக்கப்பட்டது. ஆனால், கோலியோ தோனியோ வெளிப்படையாகப் பேசாதவரை இவற்றை வெறும் ஊகங்களாக மட்டுமே கருதமுடியும்.

கோலி

உண்மைக் காரணம் எதுவாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியிருப்பதை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அணித் தேர்வு சொதப்பல்கள், முன்னாள் வீரரும் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவருமான அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது அவரை நடத்திய விதம், களத்தில் எதிரணி வீரர்களிடமும் நடுவர்களிடமும் தேவைக்கதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது, அந்தப் பழக்கத்தை அணியின் பிற வீரர்களுக்கும் பரப்பியது ஆகியவை தொடர்பாக கோலி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவரின் அதிதீவிர ரசிகர்களும் புறந்தள்ள முடியாதவை. ஆனால், கேப்டனாக கோலியின் சாதனைகள் இந்த விமர்சனங்களைவிட பல மடங்கு பிரம்மாண்டமானவை.

ஏற்றங்கள் நிறைந்த ஏழு ஆண்டுகள்

2014 டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டி முடிந்த பிறகு, அப்போது கேப்டன் பதவி வகித்த தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தே மொத்தமாக விலகுவதாக அறிவித்தார். ஆக, அந்நிய மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருந்த தொடரின் நடுவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார் கோலி. 2017-ல், வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவங்களுக்கான கேப்டனாகவும் தோனியிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் தலைமையில் இந்திய அணி தாய்நாட்டிலும் அந்நிய மண்ணிலும் பல வெற்றிகளைக் குவித்துவந்தது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் கோலியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அபாரமானவை.

கோலி அணித் தலைவராக செயல்பட்ட 68 டெஸ்ட் போட்டிகளில், 40 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. வேறெந்த இந்திய கேப்டனும் நிகழ்த்தியிராத சாதனை இது. சர்வதேச அளவிலும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் (109 போட்டிகள்/53 வெற்றிகள்), ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்களான ரிக்கி பாண்டிங் (77/48), ஸ்டிவ் வா (57/41) ஆகியோர் மட்டுமே கோலியைவிட அதிக டெஸ்ட் போட்டிகளில் தம் அணியை வெற்றிக்கு வழிநடத்தியுள்ளனர்.

கேப்டன் பொறுப்பை சுமந்துகொண்டே, மட்டைவீச்சிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் கோலி. கேப்டனாக இருந்த காலகட்டத்தில் 5,864 ரன்களைக் குவித்திருக்கிறார். வேறெந்த இந்தியரும் கேப்டனாக இருந்தபோது இவ்வளவு ரன்களைக் குவித்ததில்லை. அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தான் அடித்துள்ள ஏழு இரட்டை சதங்களையும் கேப்டனாக இருந்த காலத்தில்தான் அடித்துள்ளார் கோலி.

எண்களைக் கடந்த சிறப்புகள்

கேப்டனாக கோலியின் அதீத ஆக்ரோஷ உணர்வு, வீரர்களுக்கும் தொற்றிக்கொண்டது. அவருடைய கறாரான போக்கு, இளம் வீரர்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தது என்பது போன்ற விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய அணியின் இளம் வீரர்கள் பலரும் அவரைத் தமது முன்னோடியாகவும் பாதுகாவலராகவும் பார்த்தார்கள். தன்னைப்போலவே, அணியில் உள்ள அனைவரும் கட்டுக்கோப்பான உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அதைச் செயல்படுத்திக் காண்பித்தார் கோலி. ஆடுகளத்திலும் தன்னுடைய அணியினரைப் பல வகைகளில் பாதுகாத்தார். அவர்களுக்கு நேரும் அவமரியாதையைத் தனக்கு நேர்ந்த அவமானமாக எடுத்துக்கொண்டு பதிலடி கொடுத்தார். பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.

கோலி

நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்க தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டை பிடித்தபோது, அவருக்கு பவுன்சர்களை வீசியதோடு சில தேவையற்ற வார்த்தைகளைப் பேசி வம்புக்கிழுத்தார், தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர் மார்கோ யான்சென். இதை பெவிலியனிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த கோலி, மூன்றாம் போட்டியின் முதல் இன்னிங்ஸில் யான்சென் மட்டைபிடிக்க வந்தபோது, பும்ராவிடம் பந்தைக் கொடுத்து அவருடைய விக்கெட்டை வீழ்த்தவைத்தார். அண்மைக் காலங்களில், மூத்த பேட்ஸ்மேன்களான புஜாராவும் ரஹானேவும் மிக மோசமாக விளையாடிவந்தாலும் அவர்களைப் பற்றி ஊடகங்களில் விட்டுக்கொடுக்காமல் பேசினார். இதுபோன்ற காரணங்களால், அணிவீரர்கள் பலரின் அன்பையும் மரியாதையும் பெற்றவராகத் திகழ்ந்தார் கோலி.

குழப்பமும் நம்பிக்கையும்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இப்போது அணிக்கு அடுத்த கேப்டனாகப் பதவியேற்க முழுமையான தகுதிபடைத்தவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. புஜாரா, ரஹானே இருவரும் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். அந்நிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாகக்கூட இன்னும் தன்னை முழுமையாக நிரூபித்திராத ரோகித் ஷர்மாவோ, ஒப்பீட்டளவில் குறைந்த அனுபவம் கொண்ட கே.எல்.ராகுலோ டெஸ்ட் அணிக்கான அடுத்த கேப்டனாக்கப்படலாம். ஆனால், இவர்கள் இருவர் உட்பட யாரை கேப்டனாக்கினாலும் அது புதிய பரிசோதனை முயற்சியாகத்தான் இருக்கும். தகுதியான தலைமையை அடையாளம் காண்பதற்கு முன்பே, அணியை வெற்றிகரமாக வழிநடத்திக்கொண்டிருந்த தலைமை பதவி விலகியிருப்பதற்கு பிசிசிஐ பொறுப்பேற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மூத்த வீரர்களைக் கையாளும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கோலி

கோலியைப் பொறுத்தவரை, அவருடைய மட்டைவீச்சில் அண்மைக் காலத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 நவம்பருக்குப் பிறகு, அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் சரியான நீளத்தில் வீசும் வேகவீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் பந்தைத் துரத்திச் சென்று அடிக்க முயன்று, கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழப்பது அதிகரித்துள்ளது.

தலைமைச் சுமையை இறக்கிவைத்துவிட்ட கோலி, மட்டைவீச்சில் உள்ள குறைகளை விரைவில் களைந்து, இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு மூத்த வீரராகவும் முதன்மை பேட்ஸ்மேனாகவும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். கபில் தேவ் போன்றோரும் இதை வலியுறுத்தியிருக்கின்றனர். நீண்டகாலமாக ரசிகர்களைக் காக்கவைத்திருக்கும் 71-வது சதத்தை, கோலி அடிக்க வேண்டும். மேலும் பல சதங்களையும் இரட்டை சதங்களையும அடித்து சர்வதேச கிரிக்கெட்டில், இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும். அதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE