சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது மேற்கு இந்தியத் தீவுகள்: நியூஸிலாந்து அணி லீக் சுற்றுடன் நடையை கட்டுகிறது | T20 WC

By KU BUREAU

டிரினிடாட்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘சி’ பிரிவில் டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்துடன் மோதியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 12.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. ஜான்சன் சார்லஸ் 0, பிரண்டன் கிங் 9, நிக்கோலஸ் பூரன்17, ராஸ்டன் சேஸ் 0, கேப்டன் ரோவ்மன் பொவல் 1, அகீல் ஹோசைன் 15, ஆந்த்ரே ரஸ்ஸல் 14 ரன்களில் நடையை கட்டினர்.

இருப்பினும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 39 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரோமாரியோ ஷெப்பர்டு 13, அல்சாரி ஜோசப் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் அபாரமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். டிம்சவுதி, லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்கவீரர்களான டேவன் கான்வே 5 ரன்னில் அகீல் ஹோசைன் பந்திலும், ஃபின் ஆலன் 26 ரன்களில் அல்சாரி ஜோசப் பந்திலும் வெளியேறினர்.

ரச்சின் ரவீந்திரா (10), கேப்டன்கேன் வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (12) ஆகியோரை குடகேஷ் மோதி வெளியேற்றினார். ஜேம்ஸ் நீஷம் 10 ரன்களில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற கிளென் பிலிப்ஸ் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள்எடுத்த நிலையில் அல்சாரி ஜோசப்பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

டிம் சவுதி 0, டிரெண்ட் போல்ட் 7ரன்களில் வெளியேறினர். கடைசிஓவரில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. சாண்ட்னர் 12 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். குடகேஷ் மோதி3 விக்கெட்களை கைப்பற்றினார்.

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் பப்புவா நியூகினியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் உகாண்டாவை 134 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீழ்த்தியிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்துள்ளது.

அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்தஅணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இரு தோல்விகளால் நியூஸிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இதே பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றில் எளிதாக நுழைந்துவிடும். இது நிகழும் பட்சத்தில் நியூஸிலாந்து அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியாது.

நியூஸிலாந்து அணி 2016, 2021, 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட அந்த அணி மோசமான செயல் திறனால் தற்போது லீக் சுற்றுடன் நடையை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE