தீர்க்கப்படாத பழைய கணக்கு: தென்னாப்பிரிக்காவில் ஏன் சொதப்பியது இந்திய அணி?

By டி. கார்த்திக்

முப்பது ஆண்டுகளாகத் தென்னாப்பிரிக்க அணியிடம் பாக்கி இருக்கும் தோல்விக் கணக்கை, இந்திய கிரிக்கெட் அணி இந்த முறையாவது தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தோல்விக் கணக்குக்கு ‘முற்றும்’ போடாமல் ‘தொடரும்’ எனப் போட்டுவைத்திருக்கிறது இந்திய அணி. அனுபவமற்ற அணியாகக் காட்சியளிக்கும் தென்னாப்பிரிக்காவை, இந்திய அணி வீழ்த்த முடியாமல் போனதற்கு என்ன காரணம்? எங்கே தவறு செய்தார்கள் இந்திய வீரர்கள்?

கைகூடாத டெஸ்ட் வெற்றி

நிறவெறிக் கொள்கையால், சர்வதேசச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்குக் கிரிக்கெட் விளையாட 25 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-92-ம் ஆண்டில் சென்ற முதல் அணி, இந்தியாதான். ஒரு புதிய அணியாக இருந்த தென்னாப்பிரிக்கா, அப்போதே 5 டெஸ்ட் கொண்ட தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு இந்திய அணி 7 முறை தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவிட்டது. ஆனால், இந்திய அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் சாதனை என்றால், 2010-11-ல் விளையாடிய தொடர்தான். அப்போது நடந்த 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்தது. இதுவே தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் சிறந்த தொடர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடியவை. அந்த அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து, கடந்த காலத்தில் இந்திய அணியைத் தெனாப்பிரிக்கா மிரட்டியது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சு யூனிட், உலகில் சிறப்பான பந்துவீச்சாளர்களுடன் உள்ளது. அதன் காரணமாகத்தான் 2018-19 மற்றும் 2020-21-ல் ஆஸ்திரேலியாவிலும் 2022-ல் இங்கிலாந்திலும் இந்திய கிரிக்கெட் அணியால் சாதிக்க முடிந்தது.

2018-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியபோது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய அணி தெனாப்பிரிக்காவைத் தெறிக்கவிட்டது. என்றாலும் அப்போது 1 - 2 என்ற கணக்கில் தொடரை தென்னாப்பிரிக்காவே வென்றது. அப்போது அந்த அணியில் ஃபா டு பிளஸ்ஸிஸ், ஹாசிம் அம்லா, டிவில்லியர்ஸ், மோர்னே மோர்க்கல், கிறிஸ் மோரிஸ், பிளாண்டர், ரபாடா, டேல் ஸ்டெயின் எனத் தரமான பல வீரர்கள் இருந்தனர். அதனால், அந்த வெற்றி தென்னாப்பிரிக்காவுக்குச் சாத்தியமானது.

நான்கு காரணங்கள்

ஆனால், 2021-22 டெஸ்ட் தொடரில் இந்திய அணியே தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், தென்னாப்பிரிக்க அணியைவிட இந்திய அணியே அனுபவ வீரர்களையும் சிறந்த வீரர்களையும் கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் தென்னாப்பிரிக்காவைவிட இந்திய அணியே அனைத்து விதங்களிலும் சிறப்பான அணியாக இருந்தது. அப்படி இருந்தும், இந்திய அணி 1 - 2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இந்தியாவின் இந்தச் சொதப்பலுக்கு முக்கியமாக நான்கு காரணங்களைக் குறிப்பிடலாம்.

1. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணியில் கடந்த 2 ஆண்டுகளாகவே விராட் கோலி, சேட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் ஃபார்மிலேயே இல்லை. குறிப்பாக, புஜாராவும் ரஹானேவும் இந்தத் தொடருக்குத் தேர்வுசெய்யப்பட்டதே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. புஜாரா 6 இன்னிங்ஸ்களில் 0, 16, 3, 53, 43, 9 என மொத்தமே 124 ரன்களைத்தான் இந்தத் தொடரில் எடுத்தார். ரஹானேவோ 48, 20, 0, 58, 9, 1 என 136 ரன்களைத்தான் சேர்த்தார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் தரமான தாக்குதல் வீச்சுக்கு, இவர்களிடமிருந்து ஸ்திரமான பேட்டிங் திறமை வெளிப்படவேயில்லை. இந்த இரு முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

2. ஏமாற்றிய ஓப்பனர்கள்

வெளிநாடுகளில் தொடரை வெல்ல வேண்டுமென்றால், தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்துத் தர வேண்டும். செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கே.எல்.ராகுலின் பேட்டிலிருந்து செஞ்சுரி வந்தது. இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால், நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடியதால் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பைத் தென்னாப்பிரிக்காவில் தகர்த்தார். அதிகபட்சமாக செஞ்சுரியனில் 60 ரன்கள் அடித்ததோடு சரி. அதன்பிறகு எஞ்சிய 5 இன்னிங்ஸ்களில் ஒன்றில்கூட அவர் 30 ரன்களைத் தாண்டவில்லை.

3. ஜொலிக்காத அஸ்வின்

2021-ம் ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். மூத்த ஆஃப்-ஸ்பின்னரான அஸ்வின், அணியில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே, அனுபவமற்ற தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசைக்கு எதிராகத் தன்னுடைய சுழல் பந்துவீச்சில் எந்த மேஜிக்கையும் செய்துகாட்டவில்லை. 6 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

இதுபோன்ற வேகப்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளங்களில் கடந்த காலங்களில் அனில் கும்ப்ளே ஓரளவு சிறப்பாகப் பங்களித்திருக்கிறார். ஆனால், அஸ்வினிடமிருந்து அப்படியொரு பங்களிப்புக்கூட வெளிப்படவில்லை. ஆல்ரவுண்டர் என்று அஸ்வின் வகைப்படுத்தப்பட்டபோதும் பேட்டிங்கிலும் அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஜொலிக்கவில்லை.

4. ஓரங்கட்டப்பட்ட ஸ்ரேயாஸ், ஹனுமா

இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில்கூட விளையாடாமல் பெவிலியனில் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்கார வைக்கப்பட்டதைப்போல, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், தென்னாப்பிரிக்கத் தொடரில் ஓரங்கட்டப்பட்டார். இதேபோல ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்குப் பதிலாகச் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரியும் பார்வையாளராகவே உட்கார வைக்கப்பட்டிருந்தார். இந்த இரு வீரர்களையும் குறைந்தபட்சம் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது புஜாரா, ரஹானேவுக்குப் பதில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் டிராவிட் இந்த இரு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாரி வழங்கிய வாய்ப்பு, விழலுக்கு இறைத்த நீரானது.

இதுபோன்ற தவறுகளால் அனுபவமற்ற, பல புதிய வீரர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியை அதன் மண்ணில் முதன்முறையாக வீழ்த்த கிடைத்த அரிய வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுவிட்டது. தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “இந்திய அணியில் இப்போது இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் முன்பே இருந்திருந்தால், இந்திய அணி எப்போதோ தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்றிருக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமையுள்ள வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி வெல்ல முடியவில்லை என்றால், அதற்கு பேட்ஸ்மேன்களைத் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்?!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE