ரிஷப் பந்த் 100

By காமதேனு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் பதிவு செய்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமமாகியுள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

3-ம் நாளான இன்றைய ஆட்டத்தை புஜாராவும் கோலியும் தொடர்ந்தனர். முதல் ஓவரை ஜான்சென் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரின் 2-வது பந்திலேயே புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரில் ரபாடாவின் பந்தில் ரஹானே ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 58 ரன்கள் எடுத்தபோது களத்துக்கு வந்தார் ரிஷப் பந்த். கேப்டன் கோலி அவுட்டாகும்வரை, ரிஸ்க் எடுத்து விளையாடி வந்தார் ரிஷப் பந்த். தனது கேப்டன் அவுட்டானதும் ஆட்டத்தில் அணுகுமுறையை மாற்றினார். அதுவரை அடித்து விளையாடிய ரிஷப் பந்த், நிதானமாகத் தனது ஆட்டத்தை விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்டுகளை இந்தியா இழந்து கொண்டிருக்க, மறுபக்கம் நிலையாக நின்று விளையாடினார் பந்த்.

133 பந்துகளில், 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து விரட்டி சதத்தையும் தொட்டார் பந்த். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்துள்ள இந்தச் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த்பதிவு செய்துள்ள 4-வது சதம் ஆகும். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்து விளையாடியுள்ளார் ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த்தின் ஆட்டத்தின் மூலம், இந்தியா இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக அந்த அணிக்கு நிர்ணயித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE