சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

By காமதேனு

“சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியுள்ளார்.

பஞ்சாப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

சாய்னா நேவாலின் ட்வீட்டுக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் உள்ளது. வெட்கப்படுகிறோம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். சித்தார்த்தின் இந்தப் பதிவு ஆபாசமாக இருப்பதாகக் கூறி, பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

சித்தார்த்

இந்நிலையில், “எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்” என்று சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த். இந்த நிலையில், சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள சாய்னா நேவால், “அவர் (நடிகர் சித்தார்த்) முதலில் என்னைப் பற்றி சில கருத்துகளை சொன்னார், பிறகு மன்னிப்பு கேட்டார். அது ஏன் இவ்வளவு வைரலானது என்றுகூட தெரியவில்லை. ட்விட்டரில் நானே டிரெண்டாகி வருவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. ஒரு பெண்ணை குறிவைக்கக் கூடாது. பரவாயில்லை. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE